செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் 11 பேருக்கு வருமான வரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திருச்சி: செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து 11 பேர் திருச்சி வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது வருமான வரித் துறையினர் முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வியாழக்கிழமை முதல் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 50 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து 4 நாள்கள் நீடித்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தங்கம், வைர நகைகள் ஏராளமாக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் சரவணன், சுப்பிரமணியம், தியாகராஜன் உள்ளிட்ட 11 பேரும் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் ஆஜராகவில்லை என்று திருச்சி வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications