திருநெல்வேலி மேயராக அதிமுக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு: ரத்து செய்யக் கோரி வழக்கு!
மதுரை: திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர மேயர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வாபஸ் நாளில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென மனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் புவனேஸ்வரி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த சையது அலி பாத்திமா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுவை தாக்கல் செய்தார்.

அம்மனுவில், தேர்தல் விதிகளின்படி, எனது வேட்பு மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திருந்தேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலின்படி, எனது விவரம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்திருந்தேன். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி எனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்து விட்டார்.
மேலும், இரு வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருக்கிறார். தேர்தல் நடைபெறும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதிமுக வேட்பாளரை போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், எனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தள்ளுபடி செய்திருக்கிறார்.
இதனால் திருநெல்வேலி மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தேர்தல் நடத்தும் அலுவலரான திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications