மாநகராட்சியாகும் காரைக்குடி? புதிதாக ஐந்து நகரங்கள் தமிழகத்தில் மாநகராட்சியாக வாய்ப்பு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்குடி இருந்தது. பின்னர் சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின்னர் தேர்வு நிலை நகராட்சியாக 1988-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 2013-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

காரைக்குடி நகராட்சியில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 13.75 சதுர கி.மீ. பரப்பு கொண்ட நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்கு மேல் இருக்கிறது. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. காரைக்குடியின் முக்கியமான மையமாக அழகப்பா பல்கலைக்கழகம் இருக்கிறது. மேலும், சிகிரி, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளன. வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி இருக்கிறது.
விரைவில் இங்கு டைட்டில் பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடி வர்த்தக மையமாக உள்ள நிலையில், இங்கு தினமும் பல்லாயிரம் பேர் வந்து செல்கிறார்கள். காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் காரைக்குடி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் சட்டப்பேரவையில் பேசும் போது, காரைக்குடி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி விரைவில் காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்க மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். அதன்படி காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, அமராவதி-புதூர் ஆகிய 5 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என நகராட்சி தலைவர் முத்துத்துரை தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை இணைத்தால் காரைக்குடியின் மக்கள்தொகை 3 லட்சமாக உயரும். 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.
தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. தமிழகத்தில் வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் மதுரை மாநகராட்சியும் சேலம் மாநகராட்சியும் உள்ளது.
அதற்கு அடுத்ததாக திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் இருக்கின்றன. மிககுறைந்த மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளாக கும்பகோணம், கடலூர் மற்றும் சிவகாசி ஆகியவை உள்ளன. காரைக்குடியுடன் திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகியவையும் மாநகராட்சியாக ஒருவேளை அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிடும்.












Click it and Unblock the Notifications