மாரடைப்பு... பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு மரணமடைந்த ஐ.டி நிறுவன டிரைவர்
தாம்பரம்: சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவன பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தியதால் அதில் இருந்த பொறியாளார்கள் உயிர்தப்பினர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு நேற்று காலை மறைமலைநகரில் இருந்து பொறியாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றது.
கோவிலம்பாக்கத்தை சேர்ந்த 31 வயதான ஆனந்தன் என்பவர் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 8 பொறியாளர்கள் அமர்ந்து இருந்தனர்.
தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் பஸ் வந்தபோது ஆனந்தனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ஓரத்தில் நிறுத்தி விட்டு வலியால் துடித்தார். சிறிதுநேரத்தில் பஸ்சில் உள்ள ஸ்டியரிங்கின் மீது மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் பின்னால் வந்த கார் ஒன்றை நிறுத்தினர். அந்த காரில் டிரைவர் ஆனந்தனை ஏற்றிக்கொண்டு, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாரடைப்பு ஏற்பட்ட உடன் டிரைவர் ஆனந்தன் உடனடியாக பஸ்சை ஓரமாக நிறுத்தியதால் அதில் இருந்த ஊழியர்கள் உயிர்தப்பினர். இல்லையென்றால் மேம்பாலத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications