வருமான வரித்துறை சம்மன்... ஆஜராகாத ராம மோகன் ராவ், விவேக்- காரணம் என்ன?
மனைவிக்கு உடம்பு சரியில்லாததால் வருமான வரித்துறையினர் அலுவலக விசாரணைக்கு ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை: ராம மோகனராவ் மகன் விவேக்கின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு தினங்கள் சோதனை நடத்தினர். சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து விவேக்கிடம் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று மாலை ஆஜராகி விளக்கம் தர விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.
விவேக் ரூ.16 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலு விவேக் வீடு, அலுவலகத்தில் நடந்த 30 மணிநேரத் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்த விவேக் கடந்த 2011ம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு வந்துள்ளார். சில மாதங்களிலேயே 6க்கும் மேற்பட்ட கம்பெனிகளை துவக்கியிருக்கிறார். அவற்றில் 4 கம்பெனிகள் செயல்படுகின்றன.
அதில் விர்டு டெக்னாலஜிஸ், புளூ ஓசியன் பி அண்ட் ஏ சர்வீசஸ், டிரான்ஸ் எர்த் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 3 கம்பெனிகளும் சேமியர்ஸ் சாலையில் இயங்குகின்றன. இவற்றில் நடத்திய ரெய்டுகளில் பல லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. முதல் கட்ட ஆய்வில், இந்த கம்பெனிகளில் அவர் செய்துள்ள முதலீடு பணம், கணக்கு காட்டப்படாத பணமாக உள்ளது. மேலும், லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

வக்கீல் அமலநாதன்
ராமமோகன் ராவின் பினாமியாக அவருடைய நண்பரும், வக்கீலுமான அமலநாதன் செயல்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய சொகுசு பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பணம், நகை பறிமுதல்
வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நடத்திய சோதனையில் ரூ.29 லட்சத்துக்கு புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகள் உள்பட மொத்தம் ரூ.60 லட்சம் பணமும், 10 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகாரிகள் விசாரணை
ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகம், விவேக்கின் வீடு மற்றும் அலுவலகம், வக்கீல் அமலநாதனின் வீடுகளில் இருந்து வங்கி கணக்கு விவரம், சொத்து பட்டியல், வெளிநாட்டு முதலீடுகள் போன்ற பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதனடிப்படையில் அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஆஜராக சம்மன்
இந்தநிலையில் வருமான வரித்துறை சட்டத்தின்படி, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக், வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோர் எந்த நேரத்திலும் சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

1 மணி நேரம் விசாரணை
மதியம் 3 மணியளவில் வக்கீல் அமலநாதன் வருமானவரி அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம், ராமமோகன ராவுடனான தொடர்பு மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். விசாரணைக்கு மீண்டும் அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தினர்.

ரகசிய விசாரணை
ராமமோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் எப்போது வருவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மனைவிக்கு உடல்நலமில்லை என விவேக் காரணம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளளது. அதே நேரத்தில் இவர்கள் இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நேரத்திலும் இவர்கள் இருவரும் கைதாக உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications