சென்னையிலும் பரவியது போராட்டம்… அலங்காநல்லூர் இளைஞர்களை விடுதலை செய்யக் கோரி சாலை மறியல்
சென்னை: சென்னையிலும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 21 மணி நேரமாக போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வருகிறது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள், பெண்கள் என யாரும் அதனை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை இருக்கும் விவேகானந்தர் இல்லம் அருகில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் சென்னை இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications