தேமுதிக- பாஜக கூட்டணி: விஜயகாந்த்தை சந்திக்க வருகின்றனர் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல்
சென்னை: தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க பாஜக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகை தர உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான யூகங்கள் முடிவடையும் தருணம் வந்துவிட்டது.. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகை தர உள்ளார். இதன்பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட உள்ளது.
இதேபோல் தேமுதிக- பாஜக கூட்டணியை உறுதி செய்ய மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஓரிருநாட்களில் சென்னை வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே தொலைபேசியில் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தேமுதிக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரையில் மார்ச் முதல் வாரத்தில் பிரசார களத்தில் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. ஆகையால் அதற்கு முன்னதாக கூட்டணி தொடர்பான அனைத்து பணிகளையும் முடிப்பதில் அக்கட்சி முனைப்புடன் உள்ளது.
தமிழகத்துக்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து வருகை தர உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications