புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த ஜெயலலிதாசென்னை: வேப்பேரியில் ரூ. 25 கோ
சென்னை: வேப்பேரியில் ரூ. 25 கோடியே 46 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையரக அலுவலக கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
''சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்ற நிகழ்வுகளில் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது, நுண்ணறிவு செய்திகள் சேகரிப்பதன் மூலம் மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது போன்ற மகத்தான பணிகளைக் காவல் துறை ஆற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
காவல் துறையினருக்கு "உங்கள் சொந்த இல்லம் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக காவல்துறை சிறப்பு அங்காடிகள், வீரத் தீரத் செயல் புரியும் காவலர்களுக்கு ரொக்கப் பரிசு போன்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு கடினமான சூழ்நிலையில் காவல் துறையினர் பணியாற்ற வேண்டியுள்ளதைக் கருத்தில் கொண்டு காவல் துறையினர் பணிபுரியும் அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
சென்னை, வேப்பேரியில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரக அலுவலகம் 5.49 ஏக்கர் நிலத்தில் 1,73,000 சதுர அடி கட்டட பரப்பளவில் அடித்தளத்துடன் கூடிய 10 தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகக் கட்டடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், பண்டக சாலை; தரைத் தளத்தில் ஊடக சந்திப்பு அறை, மக்கள் தொடர்பு அலுவலர் அறை, சிற்றுண்டி சாலை, மக்கள் குறை தீர்வு கூடம் மற்றும் நுண்ணறிவு பிரிவு; முதல் தளத்தில், மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் மற்றும் பிரிவு அலுவலகங்கள்; இரண்டாம் தளத்தில், கலந்தாய்வு கூடம், மாநகர காவல் அலுவலக சம்பள மற்றும் கணினி அறை; மூன்றாவது தளத்தில், மாநகரக் காவல் அலுவலக கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு), மத்திய குற்ற அலுவலகப் பிரிவுகள்; நான்காவது தளத்தில், மாநகரக் காவல் அலுவலகம்; ஐந்தாம் தளத்தில், இணை மற்றும் துணை ஆணையாளர்கள் அலுவலகங்கள்; ஆறாம் தளத்தில், நுண்ணறிவு பிரிவு அலுவலகம், நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் அறை; ஏழாவது தளத்தில், மண்டல சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள்; எட்டாவது தளத்தில், காவல் ஆணையாளர் அறை, சிறிய கலந்தாய்வுக் கூடம், நூலகம் மற்றும் கூடுதல் ஆணையாளர் அறைகள்; ஒன்பதாவது தளத்தில், இரண்டு ஓய்வறைகள் என காவல்துறையின் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளன.
மேலும், கூடுதல் வசதிகளாக, 160 கே.வி.ஏ. திறன் கொண்ட இரண்டு மின் ஆக்கிகள், 13 நபர் செல்லத் தக்க அளவில் மூன்று மின் தூக்கிகள், அவசர வழி படிக்கட்டுக்கள், இடிதாங்கி, வானூர்தி எச்சரிக்கை விளக்கு, தீ தடுப்பு சாதனங்கள், தீ எச்சரிக்கை ஒலிப்பான், இன்டர்காம் வசதி, தெரு விளக்குகளுடன் கூடிய உள்ளமைப்பு சாலைகள், புல் தரைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி, ஊடக அறை, பொது மக்கள் காத்திருப்பு அறை, சோதனை அறை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை சமன் செய்யும் வகையில் மழைநீர் சேகரிப்பு வசதியும், மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல தடையற்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் சாய்வு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரக் காவல் ஆணையரக புதிய கட்டடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகரக் காவல் ஆணையரக புதிய கட்டடத்தில் அமைந்துள்ள ஆணையர் அறையை பார்வையிட்டார். அப்போது, சென்னை பெருநகரக் காவல் ஆணையரக புதிய கட்டடத்தின் அமைப்பு மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கும் வீடியோ படக் காட்சிகளையும் கண்ணுற்றார்கள். இந்த நிகழ்வின்போது, சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தின் காவல் துறை உயர் அலுவலர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் ராமானுஜம், காவல் துறை இயக்குநர், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர் அனுப் ஜெய்ஸ்வால், காவல் துறை கூடுதல் இயக்குநர், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ், மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications