இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெ. கண்டனம்
சென்னை: இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் சிறுபான்மை தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் குறித்தும், தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் கடந்த 2 ஆண்டுகளாக உங்களுக்கு நான் பல முறை கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன்.

4 தீர்மானங்கள்
சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் பாரபட்சமான போக்கை கண்டித்து, தமிழக சட்டசபையில் ஏற்கனவே 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர, இன்னொரு கடுமையான பிரச்சினை என்னவென்றால், தற்போதைய இலங்கை அரசின் நியாயமற்ற போக்கை வெளிக்காட்டும் வகையில், இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கியும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கைப்பற்றியும் வருகின்றார்கள்.

போர்க்குற்றத்துக்கு பொறுப்பு
தமிழக மீனவர்கள் காலவரையின்றி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்களது வாழ்வாதாரம் இழந்ததுடன், குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழமான உணர்வு மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கு ஏற்ப இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு தற்போதைய இலங்கை அரசை பொறுப்பாக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரும் நடுக்கடலில் மீனவர்கள் ஈவு இரக்கமின்றி கடத்தப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இதன் பின்னணியில், இலங்கையை நட்பு நாடு என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 27-3-2013 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பயிற்சி கூடவே கூடாது
இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டும் வகையில் கடந்த 16-7-2012, 25-8-2012, 28-8-2012 மற்றும் 8-6-2013 ஆகிய நாட்களில் நான் எழுதிய கடிதங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கடுமையான ஆட்சேபத்தை நான் தெரிவித்ததுடன், இனிமேல் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதோ அந்த ராணுவத்துடன் ஒத்துழைப்பதோ கூடாது என்பதை நமது ராணுவ அமைச்சகத்திடம் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியுள்ளேன்.
இலங்கை அரசு சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களையும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ளும் வரையிலும், இந்த விஷயத்தில் இலங்கை அரசின் நம்பகமான நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படும் வரையிலும் மேற்கண்ட உத்தரவை ராணுவ அமைச்சகத்துக்கு பிறப்பிக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

இலங்கைக்கு அழைப்பு விடுப்பதா?
மேலும், இலங்கைக்கு கடற்படை கப்பல்கள் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இலங்கை ராணுவத்திற்கு எந்த விதத்திலும் உதவக்கூடாது என்று வற்புறுத்தியும் 11-9-2013 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.
இப்பொழுது இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய கடற்படையில் பயிற்சி அளிக்கப்போவதாகவும், அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளுக்கு 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்புக்கு நமது கடற்படை அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாகவும் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி எனக்கு வருத்தம் அளிக்கிறது.

அதிர்ச்சி அளிக்கிறது
கடற்படையின் தலைமை தளபதியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்தித்துப்பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் மற்றும் உணர்வுகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, இலங்கை ராணுவத்துடன் ஒத்துழைக்கும் கொள்கையை இந்திய அரசு கையாண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்துள்ள இந்த வாக்குறுதி, இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரானது மட்டுமின்றி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்படும் இந்தியாவின் ஏழை மீனவர்களுக்கும் எதிரானது ஆகும்.

பயிற்சி அளிக்கக்கூடாது
எனவே, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு மேற்கொள்ளும் உணர்வுப்பூர்வமற்ற கொள்கைக்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கொள்கையை அவசரமாக மறு பரிசீலனை செய்து இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய கடற்படையில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications