நாளைய பாரதம் நம் கையில்… அமைச்சர்கள் திருமணவிழாவில் பொடி வைத்துப் பேசிய ஜெ.
சென்னை: வாழ்க்கை என்பது சுகம், துக்கம் இரண்டும் கலந்ததுதான். இன்பங்களும், துன்பங்களும் இயல்பானவை என்பதைப் புரிந்து கொண்டாலே, நீங்கள் வெற்றியை நோக்கி செல்கிறீர்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், செந்தூர் பாண்டியன், புதுச்சேரி எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆகிய 4 பேர் இல்ல திருமணங்கள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.
முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி 4 ஜோடி மணமக்களுக்கும் தாலி எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்துப் பேசியதாவது:

மகிழ்ச்சி பொங்கும் இந்த மங்கலத் திருநாளில், நான்கு ஜோடி மணமக்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் உன்னத வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்திருப்பது குறித்து நான் உவகை அடைகிறேன்.
இந்த நன்னாளில் பல்வேறு பணிகளுக்கும், கடமைகளுக்கும் இடையே மலர்ந்த முகங்களோடு வீற்றிருக்கின்ற மாசற்ற உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் காண்பதிலும், உங்களுடன் உரையாடுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கை என்பது சுகம், துக்கம் இரண்டும் கலந்ததுதான். தோல்வியும், வெற்றியும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வாழ்க்கையில் வரும் இன்பங்கள் இனிமையாய் இருப்பதுபோல, துன்பங்கள் அனுபவங்களாக அமைகின்றன. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது. கஷ்டங்களை எதிர்கொண்டு, சமாளித்து, வெல்வது தான் வாழ்வின் சுவை. சவால்கள் தான் வாழ்க்கையை வளப்படுத்தும் வழிகள். இன்பங்களும், துன்பங்களும் இயல்பானவை என்பதைப் புரிந்து கொண்டாலே, நீங்கள் வெற்றியை நோக்கி செல்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம்.
அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன், தோல்விகளைச் சந்தித்தப் பின் தான் வெற்றி அடைந்தார். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே, வெற்றியாளர் ஆனார். தோல்வி என்ற பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை அவசியம். தனக்கான கூட்டைத்தானே உருவாக்கும் சிட்டுக் குருவியைப் போல, தன்னம்பிக்கையை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
துன்பம் என்கிற தோல்வியை துரத்தி, இன்பம் என்கிற வெற்றியைப் பறிக்க நம்பிக்கை, நெஞ்சுறம், அமைதி, அன்பு, பொறுமை போன்ற பல ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன. இவற்றை மணமக்களாகிய நீங்கள், உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் துன்பங்களை தகர்த்து, இன்பக் கோட்டையை எளிதாகக் கைப்பற்றலாம்.
"வாழ்க்கையில் மிகவும் உயரிய லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சியத்திற்காகவே உங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்யுங்கள். அந்த லட்சியத்தின் நினைவாகவே வாழுங்கள். எந்நேரமும் அந்த லட்சியத்தைப் பற்றிக் கனவும் காணுங்கள். அந்த லட்சியத்திற்காக அனைத் தையும் தியாகம் செய்யுங்கள். அந்த லட்சியத்தால் நிறைந்திருங்கள். அந்த லட்சியத்திற்காகவே செயலாற்றுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்" என்றார் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரின் இந்த லட்சியத்தை, உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், பொது வாழ்விலும், கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் கடைபிடிக்க வேண்டும். வருகின்ற மக்களவைத் தேர்தலில், நாற்பது தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், குறிக்கோளுடன், இலக்குடன் கழக உடன்பிறப்புகளாகிய உங்களுடைய களப் பணி அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு;
"நாளைய பாரதம் நம் கையில்", என்று கூறி, மணமக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தமிழும் இனிமையும் போல, கவியும் இசையும் போல, மலரும் தேனும் போல, கரும்பும் சுவையும் போல மண வாழ்க்கை மகிழ்ச்சி பொங்க, எதிர்காலம் எழுச்சி பொங்க பல்லாண்டு வாழ்க! வாழ்க! என மனதார வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துடன் அறிவுரை கூறினார் முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications