ஊழலில் தமிழகம் முதலிடம்... ஜெ. அரசின் சாதனை இதுதான்: மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சியில் "கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்" அதிகரித்து விட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். லஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், கூறியுள்ள கருத்து:
''ஊழலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (National Council of Applied Economic Research) எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தொழில்துறையில் எந்த அளவிற்கு மோசமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்குகிறது.

மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு உட்கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்களை இந்த ஆய்வில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். "தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவேன்" என்று கடந்த ஐந்து வருடமாக பல்லவி பாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்த ஐந்து அம்சங்களில் ஒன்றில்கூட தமிழகம் முதன்மை மாநிலமாக வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிற்சாலைகள் அமைக்க வருவோரிடம் லஞ்சம் பெறுவதில் மட்டும்தான் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று முதன்மை மாநிலமாக மாறியிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியின் லஞ்ச லாவண்யத்தையும், தொழிற்சாலைகள் தொடங்க வருவோரிடம் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள அமைச்சர்களும், முதல்வரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு "கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்ற ரீதியில் எடுத்துக் காட்டியிருக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா. 200 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து அ.தி.மு.க.வின் விளம்பர மாநாடாகவே அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுவிட்டதாக பொய்யுரைத்தார்.
அதன் பிறகு ஜனவரி 2016ல் சட்டமன்றத்தில் நிகழ்ந்த ஆளுநர் உரையில் "தமிழகத்தில் தொழில் முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவி வருகிறது" என்று ஆளுநரை வாழ்த்துப்பா பாட வைத்தார். ஆனால் இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் தொழில்தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் என்ற பட்டியலில்கூட தமிழகம் முதன்மை மாநிலமாக வரவில்லை என்பது வேதனைக்குரியது என்பது மட்டுமல்ல வெட்கக் கேடானது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் இப்படி இந்த ஆட்சியில் பின்தங்கிவிட்டதாக வெளிவந்த முதல் ஆய்வு முடிவு அல்ல இது. இதற்கு முன்பே "உலக பொருளாதார அமைப்பு" வெளியிட்ட ஆய்வில் "தமிழகம் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமல்ல" என்று கூறி விட்டது. இந்தியா டுடே பத்திரிக்கை "தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20வது இடத்திற்கு போய் விட்டது" என்று இடித்துரைத்து விட்டது.
மத்திய புள்ளியியல் இயக்குநரகத்தின் ஆய்வில் "தமிழகம் வளர்ச்சிப் பட்டியலில் இந்திய மாநிலங்களிலேயே கடைசி இடத்திற்குப் போய் விட்டது" என்று எச்சரித்து விட்டது. இப்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் உலகின் பார்வையை இந்தியாவின் பக்கமாகத் திரும்ப வைத்த நந்தன் நிலகேனி போன்றோர் இடம்பெற்றுள்ள தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் "தமிழகம் ஊழலில் முதல் மாநிலமாகி விட்டது" என்று அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்திற்கு இறுதிச் சான்றிதழ் அளித்துவிட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் "கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்" படு மோசமாக அதிகரித்து விட்டது என்றும், தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி விட்டது என்றும் இதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்து வைத்து வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
"புதிய தொழில் கொள்கை" "விஸன்-2030", "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" என்றெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் தமிழக மக்களை வஞ்சகத்துடன் ஏமாற்றிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி பற்றி ஆய்வுகளை நடத்தும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சம்மட்டி அடி கொடுத்து விட்டது. ஆனாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவோ, தொழில்துறை அமைச்சரோ அல்லது இந்த ஒட்டுமொத்த அரசோ அது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
மாநில வளர்ச்சி என்பதை மூட்டை கட்டி வைத்துவிட்டு தங்களின் வளர்ச்சி, தங்களின் சுயநலம் என்ற ஒரே நோக்கில் தொழில்துறை அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையே செயல்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சியில், உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை இல்லாமல் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
தொழில் வளர்ச்சி பற்றி துளியும் அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். அதற்கான முடிவினை தமிழக மக்கள் ஏற்கனவே எடுத்து விட்டார்கள். கழக அரசு அமைந்தவுடன் தொழில் தொடங்கவும், தங்கு தடையின்றி தொழில் முதலீடுகள் வரவும் ஏற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மத்தியில், அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தலைகுனிவு நிச்சயம் அகற்றப்படும். "கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்" இல்லாத தொழில் கொள்கை வகுக்கப்பட்டு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செவ்வேனே அழைத்துச் செல்லப்படும் என்ற உறுதியை இளைஞர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறி உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications