தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: 14 மாதத்துக்கு பின் கட்சி அலுவலகம் வந்த ஜெ. பேச்சு
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்றும் அதிமுக இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு அத்திப் பூத்தார் போல 14 மாதங்களுக்குப் பிறகு வந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இன்று காலை 10.30 மணிக்கு வந்த ஜெயலலிதா 6 மாவட்ட கட்சி அலுவலகத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு கட்சி அலுவலகம் இருந்த ராயப்பேட்டை பகுதி விழாக்கோலம் பூண்டது. ஜெயலலிதாவின் திடீர் வருகை பற்றிய செய்தி பரவவே காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க, நாதஸ்வரம் மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதனை எதிர்கொள்ள ஆளும் அதிமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில், மாவட்ட தலைநகரங்களில் புதிய கட்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 6 மாவட்ட அ.தி.மு.க. அலுவலகங்களை கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா இன்று வீடியோ காண்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார்.

ராயப்பேட்டையில் குவிந்த தொண்டர்கள்
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 10.30 மணிக்கு, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியானது முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ப்ளெக்ஸ் பேனர்கள், வரவேற்பு பேனர்கள் களைகட்டியது.

உற்சாக வரவேற்பு
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பல மாதங்களுக்கு பிறகு தனது கட்சி தலைமை அலுவலகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியானது முதலே அவரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர். நேரம் செல்லச் செல்ல தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. ஜெயலலிதா வருவாரா? வரமாட்டாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில் தலைமை அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா.

பூரண கும்ப மரியாதை
அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். ஒரு பக்கம் செண்டை மேளம் முழங்க, மறுபக்கம் நாதஸ்வரம் இசைக்க விழாக்கோலம் பூண்டது ராயப்பேட்டை பகுதி. ஜெயலலிதாவைப் பார்த்த உடன் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

மகத்தான வெற்றி
தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 6 மாவட்ட அ.தி.மு.க. அலுவலகங்களை வீடியோ காண்பரன்சிங் மூலம் திறந்து வைத்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.

பலநூறு ஆண்டுகள் மக்கள் பணி
அதிமுக இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்று கூறிய ஜெயலலிதா, தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருவதாக கூறினார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
|
2014ல் வந்த ஜெயலலிதா
கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் அதிமுக பொதுச்செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப் பட்டார். அப்போது, கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது பேசிய ஜெயலலிதா, களத்தில் எதிரிகளே இல்லை என்று பேசினார். அதற்குப்பின், சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் மாதம் சிறை சென்றார்.

கட்சி அலுவலகத்திற்கு வராத ஜெ
சிறை சென்ற ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்த பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றார். மீண்டும் முதல்வராக பதவியேற்ற அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிலமுறை தொண்டர்களை நேரடியாக சந்தித்திருந்தாலும் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திக்கவில்லை.

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் சந்திப்பு
எம்.ஜி.ஆர் நினைவு தினத்திற்கு மெரீனா கடற்கரைக்குச் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஜெயலிதா. அப்போது தொண்டர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டது.

எம்.ஜி.ஆர் 99வது பிறந்தநாள் விழா
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 99வது பிறந்த தின விழா, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.

திடீர் தரிசனம் தந்த ஜெ
இந்த நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வந்து, காணொலி காட்சி மூலம் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து தொண்டர்களை சந்தித்துள்ளது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தலை சந்திக்க தயார்
கடந்த 2 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அடுத்தடுத்து தொண்டர்களை சந்தித்து வருவது அவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இது சட்டசபை தேர்தலை சந்திக்க ஜெயலலிதா தயாராக உள்ளதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications