Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் சவால்... சாகசமா? சண்டித்தனமா?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறை மானியத்திற்குப் பதில் கூறியபோது எனக்கு விடுத்த சவால், சாகசமா அல்லது சண்டித்தனமா என்பதைத் தமிழகம் நன்றாகவே புரிந்து கொள்ளும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதோடு, அண்ணா நூலகம் பற்றி, நீதிபதிகள் எச்சரிக்கை செய்தும், அதனை அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சவால்:

சவால்:

தமிழகச் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா, காவல் துறை மானியத்திற்குப் பதில் கூறும்போது எனக்கொரு சவால் விடுத்தது உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்குமென்று கருதுகிறேன்.

சென்னை உயர் நீதி மன்றப் பாதுகாப்பு குறித்து; சென்னை உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த ஒரு கருத்து பற்றி நான் விடுத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, அந்த வழக்கிலே இணைந்து கொள்ளத் தயாரா என்று எனக்கு சவால் விடுத்தார். தி.மு.கழக ஆட்சியிலே நீதி மன்றத்தில் நடந்ததையெல்லாம் தொகுத்துக் கூறியதோடு, ஜெயலலிதா மேலும் பேரவையில் கூறும்போது, "கருணாநிதியும், தி.மு.க. வினரும், உயர் நீதி மன்றத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மாநிலக் காவல் துறையினால் சரியான பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் கருதுகிறார்களா? இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு மனு தாக்கல் செய்யத் தயாரா? இதனை கருணாநிதிக்கு ஒரு சவாலாகவே நான் விடுக்கிறேன்"" என்றும் பேசினார்.

ஆதாரத்துடன் அறிக்கை...

ஆதாரத்துடன் அறிக்கை...

19-9-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், ஆதாரமில்லாமல் எதையும் கூறி விடவில்லை."தி இந்து" ஆங்கில நாளிதழில், 19-9-2015 முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியிலே, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்கள் மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதி மன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று வெளி வந்த செய்தியினை எடுத்துக் காட்டியிருந்தேன்.

அரசின் பதில் என்ன?

அரசின் பதில் என்ன?

தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதி மன்றங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவையற்றது, தமிழகப் போலீஸ் பாதுகாப்பு போதுமானது என்றெல்லாம் வாதாடிய போது, தலைமை நீதிபதி குறுக்கிட்டு "விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் உள்ளது போல மத்தியப் பாதுகாப்பு வழங்கினால் என்ன தவறு உள்ளது? பல முறை உத்தரவிட்டும் கோர்ட் வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்துகிறார்கள். எனவே தமிழகப் போலீசார் மீது நம்பிக்கை இல்லை"என்று தலைமை நீதிபதி கருத்து வெளியிட்டிருக்கிறார் என்றால், இதற்கு காவல் துறையின் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமா? வேண்டாமா? உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியே இவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார் என்றால், எதிர்க் கட்சிகள் ஜெயலலிதா அரசின் காவல் துறை மீது கொண்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை என்று தானே ஆகிறது?" என்று குறிப்பிட்டு, "இந்து" நாளிதழில் வெளிவந்த தலைமை நீதிபதியின் கருத்துக்கு இந்த அரசின் பதில் என்ன என்று தான் கேட்டிருக்கிறேன்.

ஜெயலலிதாவின் பதில்...

ஜெயலலிதாவின் பதில்...

அதற்குத் தான் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா "சென்னை உயர் நீதி மன்றத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பாதுகாப்பு அளிக்க தமிழகப் போலீஸ் தவறி விட்டது என்றும் கருணாநிதி சொல்கிறார். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் போடப்பட வேண்டும் என்கிறார்"" என்றெல்லாம் கூறினார்.

நீதிபதிகளின் கருத்துக்கள்...

நீதிபதிகளின் கருத்துக்கள்...

எனது அறிக்கையில் "நான் தெரிவித்த கருத்துகள் அனைத்துமே நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்த கருத்துகள் தான்! இதைக் கூறுவதற்காக நான் இந்த வழக்கில் இணைந்து நீதி மன்றத்தில் மனு செய்ய வேண்டுமென்பது தான் ஜெயலலிதாவின் சவால் என்றால் அதற்கு நான் தயார்! நான் தெரிவித்த கருத்துகள் நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்தவை என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்ளுமேயானால், முதலமைச்சர் ஜெயலலிதா அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்கத் தயாரா?" என்றும் கேட்டிருந்தேன். வழக்கம் போல எனது இந்தக் கேள்விக்கு முதலமைச்சரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

மத்திய அரசின் வைப்புத்தொகை...

மத்திய அரசின் வைப்புத்தொகை...

சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு மத்திய காவல் துறையின் பாதுகாப்பா? மாநில அரசின் பாதுகாப்பா? என்பதற்கான வழக்கு தான் 30-10-2015 அன்று உயர் நீதி மன்ற முதல் அமர்வின் முன்னால் விசாரணைக்கு வந்து, அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் அவர்களும், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அவர்களும் தீர்ப்பு கூறி, அந்தத் தீர்ப்பு ஏடுகளிலே வெளி வந்துள்ளது. "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, இந்தச் செய்திக்கு வெளியிட்டுள்ள தலைப்பு, "High Court orders CISF cover on its premises / Slams Govt., Wants Forces by Nov. 16" என்பதாகும். (உயர்நீதி மன்றம், தனது வளாகத்திற்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளது / அரசைத் தாக்கியதோடு, நவம்பர் 16 அன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்) என்று தலைப்பிட்ட, அந்த செய்தியில் அதாவது, "சுதந்திரமான ஓர் அமைப்பைக் கொண்டு உயர் நீதி மன்றத்துக்கு தற்காலிகமாக பாதுகாப்பு வழங்குவது அவசியம். எனவே சென்னை உயர் நீதி மன்றத்துக்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆறு மாதத்துக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கும். இதற்காக மத்திய அரசு கோரிய வைப்புத் தொகையான 16 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும்.

வேதனை...

வேதனை...

மேலும் நீதிபதிகள் கூறும்போது, நீதி மன்றப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினையை விளையாட்டாக கருதப்படுவதற்காக நாங்கள் எங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். உயர் நீதி மன்றப் பாதுகாப்பாக இதனை எடுத்துக் கொள்ளாமல் அரசியல் உள்நோக்கத்தோடு தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்காக வேதனையை வெளிப்படுத்த விரும்புகிறோம்"" என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெ.வின் சவால்...

ஜெ.வின் சவால்...

சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக இன்று செய்தி வந்துள்ளது. தமிழகச் சட்டசபையில் 22-9-2015 அன்று தலைமை நீதிபதி அவர்கள் அவ்வாறு பேசவில்லை என்று ஜெயலலிதா கூறி, என்னைச் சவாலுக்கெல்லாம் அழைத்தாரே; அவரது கருத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இப்போது திட்டவட்டமாக தெளிவாகிறதா இல்லையா?

ஆய்வு செய்து அறிக்கை...

ஆய்வு செய்து அறிக்கை...

உயர்நீதி மன்றம் 30-10-2015 அன்று அளித்த தீர்ப்பைப் பற்றிய விவரம் இது. 29.10.2015 அன்று இதே உயர் நீதி மன்றம் மற்றொரு தீர்ப்பை அளித்தது. அதாவது சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு. கழக ஆட்சியில் தெற்கு ஆசியாவிலேயே இல்லாத அளவுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கட்டப்பட்ட எழில்மிகு நூலகத்தை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த அளவுக்கு பராமரிக்காமல் வீணடித்து வருகிறார் என்பதை கடந்த நான்காண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும், அதுபற்றி அவ்வப்போது நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகளின் வாயிலாகவும் தமிழகம் நன்கறியும். இது பற்றிய வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு, வழக்கறிஞர்கள் பி.டி. ஆஷா, எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய 2 பேர் குழுவை நியமித்து நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நீதிபதிகள் உத்தரவு...

நீதிபதிகள் உத்தரவு...

இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் நூலகத்தின் குறைகளை சரி செய்து, முறையாகப் பராமரித்து, மேம்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பராமரிப்புப் பணி நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பராமரிப்புப் பணிகள் எப்போது முடிவடையும் என்ற திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு தான் 29-10-2015 அன்று மீண்டும் நீதிபதிகள் முன்னால் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மேலும் அவகாசம் கேட்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், மனோன்மணியம் ஆகியோர் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் அரசு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றனர்.

அண்ணா நூலகம்...

அண்ணா நூலகம்...

இறுதியாக நீதிபதிகள் கூறும்போது, "உயர் நீதி மன்ற உத்தரவை அரசு ஏன் அமல்படுத்தவில்லை? பல முறை உத்தரவிட்டும் அவகாசம் கொடுத்தும் அமல்படுத்தவில்லை. இதில் தயக்கம் காட்டுவது ஏன்? கடைசியாக இறுதி அவகாசம் கொடுக்கிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி உயர் நீதி மன்ற உத்தரவின்படி அனைத்து வசதிகளையும் அண்ணா நூலகத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்" என்றெல்லாம் கடுமையாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெ.வின் பொறுப்பு...

ஜெ.வின் பொறுப்பு...

இந்த வழக்கில் மேதகு நீதிபதிகள் அண்ணா நூலகம் பற்றி பல முறை இந்த அரசுக்கு எச்சரிக்கை செய்தும், திரும்பத் திரும்ப அந்தத் தீர்ப்புகளை காதில் போட்டுக் கொள்ளாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் காரணம், தி.மு.கழக ஆட்சியில் அந்த நூலகம் கட்டப்பட்டது என்பது தான்!

சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் கருத்துரைகளையும் பெரிதும் மதித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை அரசு சார்பில் மேற்கொண்டு, அரசுக்கும் - நீதி மன்றத்திற்கும் இடையே நல்லுறவை யும் நல்லிணக்கத்தையும் பாதுகாத்து வளர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு உள்ளது.

சவாலா? சண்டித்தனமா?

சவாலா? சண்டித்தனமா?

மேலும், அண்மைக் காலத்தில் நீதி மன்ற அவமதிப்புகளுக்குத் தமிழக அரசு பெருமளவுக்கு உட்படுத்தப்பட்டு வருவது ஜெயலலிதா அரசுக்கு நிச்சயமாக அவப்பெயரையே ஈட்டித் தரும். இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனித்து தவறுகளைக் களைந்து அரசு நிர்வாகத்தை ஆக்கபூர்வமான வழியில் நடத்திச் செல்வதை விடுத்து, உயர் நீதி மன்றத்தின் உள்ளக் கிடக்கையை ஊராருக்குத் தெளிவுபடுத்திடும் நோக்கில் ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்ட என்னை, சட்டப் பேரவையில் பதிலுரையின் போது சவாலுக்கழைப்பது சாகசமா? சண்டித்தனமா? என்பதைத் தமிழகம் நன்றாகவே புரிந்து கொள்ளும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+