கன்னடர்களைக் காக்கத் துடிக்கும் சித்தராமையா... தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து அமைதி காக்கும் ஜெ.!
சென்னை: தமிழகத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களும், கர்நாடக நிறுவனங்களும், கர்நாடக டிரைவர் ஒருவரும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரம் அவசரமாக தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதி கன்னடர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பெங்களூரில் தமிழ் இளைஞர் மகா மோசமாக தாக்கப்பட்ட செயலுக்கு இதுவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமலும், கர்நாடகத்தில் தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் வரும் நிலையில் அதுகுறித்து அமைதி காப்பதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக வாகனங்களைக் குறி வைத்தும் கடந்த பல நாட்களாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. ஏராளமான லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு எதிர் வினையாற்றாமல் தமிழகம் அமைதி காத்து வந்தது. ஆனால் சமீபத்தில் பெங்களூரில் தமிழ் இளைஞர் சந்தோஷ் தீனா என்பவரை சில வெறியர்கள் மிக மோசமாக தாக்கிய வீடியோ வெளியாகி மிகப் பெரிய கொந்தளிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி விட்டது.

அதன் பிறகே தமிழகத்திலும் கர்நாடக போராட்டாக்காரர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. சென்னையில் ஹோட்டல் உட்லண்ட்ஸ் தாக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் மிக மோசமான தாக்குதல் நடந்தது. கர்நாடக டிரைவர் ஒருவர் அடிக்கப்பட்டார். தொடர்ந்து தாக்குதல் பரவி வருகிறது.
இதையடுத்து கர்நாடகத்தில் விழித்தெழுந்துள்ளனர். கர்நாடகத்தவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அந்த மாநில முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். மேலும் பெங்களூரில் தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருந்த சித்தராமையா இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளோம், நடவடிக்கை எடுப்போம் என்று ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ளகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறுபக்கம் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. தமிழர்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கர்நாடக ஆளுநருக்கோ, முதல்வருக்கோ, மத்திய அரசுக்கோ முதல்வர் ஜெயலலிதா கடிதம் எதுவும் எழுதியதாக தெரியவில்லை. தமிழக அரசும் அமைதி காத்து வருகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications