"பிளாஷ்பேக்"... முதல் கைதின்போது 28 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா!
சென்னை: முதல் முறை கைது செய்யப்பட்டபோது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 28 நாட்கள் சிறையில் இருந்தார். அப்போது அவருக்கு தமிழகத்தில் அனுதாபம் வீசியதைத் தொடர்ந்தும், அவர் சிறையில் இருந்தபடியே புதுக்கோட்டை சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானதாலும், அவருக்கு சாதகமாக நிலைமை மாறி விடக் கூடாது என்பதற்காக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்ற முடிவை அப்போதைய திமுக அரசு எடுக்க வேண்டி வந்தது. இதனால் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயலலிதா.
1996ம் ஆண்டு முதல் முறை கைது செய்யப்பட்டார் ஜெயலலிதா. கலர் டிவி ஊழல் வழக்கில் இந்தக் கைது நடவடிக்கையை கோர்ட் உத்தரவின் பேரில் அப்போதைய திமுக அரசு எடுத்தது.
கலர் டிவி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா மறுத்து விட்ட காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் முதல் கைது குறித்த ஒரு பிளாஷ்பேக்...

டிசம்பர் 5, 1996
1996ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ஜெயலலிதாவை கலர் டிவி ஊழல் வழக்கில் கைது செய்வது குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

கைது செய்ய அமைச்சர்கள் வலியுறுத்தல்
அப்போது ஜெயலலிதாவைக் கைது செய்ய இதுதான் சரியான சமயம். இப்போது கைது செய்யாவிட்டால் ஏன் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு ஆளாக நேரிடும் என்று பல அமைச்சர்கள் ஆலோசனை கூறினர்.

டிசம்பர் 6 - முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் கைதை உணர்ந்து விட்ட ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி சிவப்பா தள்ளுபடி செய்து விடடார். மொத்தம் 7 முன்ஜாமீன் மனுக்கள் ஜெயலலிதா சார்பில் தாக்கலானது. அத்தனையையும் சிவப்பா தள்ளுபடி செய்து விட்டார்.

டிசம்பர் 7 - கைது
இதையடுத்து டிசம்பர் 7ம் தேதி போயஸ் தோட்ட வீட்டுக்கு விரைந்தது போலீஸ். அங்கு வைத்து ஜெயலலிதாவைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்னை செஷன்ஸ் நீதிபதி ஏ.ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கைதி எண் 2529
பின்னர் நீதிபதி ராமமூர்த்தி, ஜெயலலிதாவை 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஜெயலலிதா. அங்கு அவரது கைதி எண் 2529 ஆகும்.

அதிரடியாக மாற்றப்பட்ட நீதிபதி சிவப்பா
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சாதாரண கைதி போல பாவிக்கப்பட்டார். சாதாரண சாப்பாடே அவருக்குத் தரப்பட்டது. கொசுக் கடியில், கூவம் ஆற்றங்கரையோரம் அப்போது அமைந்திருந்த மத்திய சிறையில் தனது நாட்களை ஆரம்பித்தார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அடுத்தடுத்து மறுப்பு தெரிவித்த நீதிபதி சிவப்பா, அதிரடியாக ஜாமீன் வழங்கும் பெஞ்ச்சிலிருந்து மாற்றப்பட்டார்.

நிம்மதி கொடுத்த நீதிபதி ரங்கசாமி
அவருக்குப் பதில் ஜாமீன் வழங்கும் பெஞ்சுக்கு புதிய நீதிபதியாக ஜி.ரங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ.சாமி எடுத்தார்.

அதிகரித்த அனுதாபம்.. சுதாரித்த திமுக
இந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு அனுதாபம் ஏற்படத் தொடங்கியது மக்கள் மத்தியில். இதனால் திமுக தரப்பு சுதாரிக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் அவர் தியாகி ஆகி விடுவார், நாம் குற்றவாளி ஆகி விடுவோம் என்று திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதியிடம் கவலை தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் போட்டியிடப் போவதாக வதந்தி
இந்த நிலையில்தான் ஜெயலலிதா 1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதுவும் திமுகவை யோசிக்க வைத்தது.

28 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலை
இதையடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்ற முடிவை திமுக எடுத்தது. அதன்படி நீதிபதி ரங்கசாமி பெஞ்ச் முன்பு ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து ரங்கசாமி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 28 நாட்களுக்குப் பின்னர் வெளியில் வந்தார் ஜெயலலிதா.

சரியான பாடம் கற்பிப்பேன்.. ஜெ. முழக்கம்
ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதா நேரடியாக அதிமுக தலைமைக் கழகத்திற்குச் சென்றார். வி.ஆர். நெடுஞ்செழியன், சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னை சிறையில் தள்ளி எனது கட்சியை அழிக்க நினைத்த அத்தனை பேருக்கும் சரியான பாடம் கற்பிப்பேன் என்று சவால் விட்டுப் பேசினார்.

அப்ப ஓ.கே.. ஆனால் இப்போ...!
முதல் முறை ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலையில்தான் இருந்தார். இதனால் ஜாமீன் கிடைத்தது. ஆனால் தற்போது அவர் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி. எனவே ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications