ஜெ. இன்று வீடு திரும்புவார் என்று சொன்னீர்களே.. திரும்பாமலேயே போய்ட்டாரே?.. பிளாஷ்பேக் #Jaya
ஜெயலலிதா இன்று வீடு திரும்புவார் என்று அதிமுக சார்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை வீடு திரும்பவே இல்லை.
சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து இன்றைய தினம் வீடு திரும்புவார் என்று அதிமுகவினர் உறுதிப்பட கூறினர். ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை.
தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் உடல்நல குறைபாடுகள் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாக பேசி வந்தனர் அதிமுகவினர்.
மறுபக்கம் அப்பல்லோவும் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்த ஏராளமான தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்துக் கிடந்தனர்.

சிகிச்சை ஒத்துழைக்கும் ஜெ.வின் உடல்
ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு ஏற்ப அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் அறிக்கை அளித்த வண்ணம் இருந்தனர்.

யாருக்கும் அனுமதியில்லை
ஜெயலலிதாவை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் தொற்று அதிகமாக இருப்பதால் யாரேனும் வந்தால் இன்ஃபெக்ஷன் ஆகிவிடும் என்ற காரணத்தினால் அவரை சந்திக்க கட்சியின் தலைவர்கள் வந்தபோதும் கூட அனுமதி அளிக்கப்படவில்லை.

தொண்டர்கள் கவலை
ஒரு வாரத்தில் வீடு திரும்புவார், 15 நாட்களில் வீடு திரும்புவார் என்று நாட்கள்தான் மாறி கொண்டே வந்தது. சூழல் மாறவில்லை. இதனால் கவலை தோய்ந்த நிலையில் மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் கண்ணீர் மல்க காத்து கிடந்தனர்.

வீடு திரும்பலாம்
ஜெயலலிதா விரும்பும் நேரத்தில் அவர் வீடு திரும்பலாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருந்தார். இப்படியே நாள்கள் உருண்டோடின. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74-ஆவது நாள் அதிமுக ஒரு அறிக்கை வெளியிட்டது.

திரும்பினாரா
ஜெயலலிதா முழுவதும் குணமாகிவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, அதாவது இதே நாளில் அதிமுகவினர் தெரிவித்தனர். ஆனால் அவர் கடைசி வரை போயஸ் கார்டனுக்கு திரும்பாமலேயே போய்ச் சேர்ந்தார்.












Click it and Unblock the Notifications