சதியும், விதியும் நடத்திய சதிராட்டம்: ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஜெ. உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சதியும், விதியும் நடத்திய சதிராட்டத்தால் நடக்கும் இடைத்தேர்தல் இது என ஸ்ரீரங்கம் வாக்காளருக்கு ஜெயலலிதா உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரது பேச்சினை பதிவு செய்து பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனர் அதிமுகவினர்.

Jayalalitha writes a letter to Srirangam voters

வாட்ஸ் அப், செல்போன்களில் ஜெயலலிதாவின் குரலை ஒலிக்கச் செய்து ஹைடெக் பிரசாரத்திலும் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஜெயலலிதா அதில், கூறியுள்ளதாவது:

மூன்றாவது முறை முதல்வர்

''கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க எனக்கு வாய்ப்பு நல்கினீர்கள். இதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருள் சூழ்ந்த தமிழகம்

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் அனைத்துத்துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுமட்டுமின்றி, நிலஅபகரிப்பு, கொலை, கொள்ளை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

மகத்தான வெற்றி

அப்படியொரு அவல ஆட்சியை தந்த தி.மு.க.வை மக்கள் சக்தி என்னும் உங்கள் துணையோடு வீழ்த்தி, அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளேன். தமிழக மக்களின் உரிமையை நிலைநிறுத்துவதோடு மட்டுமின்றி, தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்நாடு நலம் பெறவும், பல்வேறு முன்னோடி திட்டங்களை தீட்டி தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியதை அங்கீகரிக்கும் வகையில் தான் கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அ.தி.மு.க.விற்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தேடி தந்தார்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதியில்

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி, வளர்ச்சிக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளோம் என்பதை நீங்கள் பறைசாற்றினீர்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இதைத்தேர்தல் நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை நான் அறிவேன். இந்த இடைத்தேர்தல் என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல்.

சதியும் விதியும்

சதியும், விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தில் விளைந்திட்ட இடைத்தேர்தல். ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளராகிய உங்கள் அன்பையும், பற்றையும், என்னுடன் பின்னி பிணைந்தள்ள பாசத்தையும், இந்த இடைத்தேர்தலால் எள்ளளவும் குறைத்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடையவே இது வழிவகுக்கும்.

சோதனையே சாதனையாய்

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நமக்கு சோதனை அளித்துள்ள இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி இதையே சாதனையாய் மாற்றி விடுவார் என்பதில், உங்களை போலவே எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு. இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் உங்களது வாக்குகளை அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதிக்கு வழங்கிட இந்த கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

அதிமுகவினர் விநியோகம்

மேலும், தமிழகம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.

இந்த கடிதம் அ.தி.மு.க. தொண்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் அன்பு சகோதரி

இதேபோன்று ஜெயலலிதாவின் குரலை ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களின் செல்போன்களில் ஒலிக்கச் செய்து ஹைடெக் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் அதிமுகவினர். அம்மா வரலைன்னா என்னா? அம்மாவோட குரல் வருதே என்று உற்சாகமடைந்துள்ளனர் அதிமுக தொண்டர்கள். எப்படியோ அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து அம்மாவின் குட்புக்கில் இடம்பெற வேண்டும் என்று அனைத்து அமைச்சர்களும் இடைத்தேர்தலுக்காக இரவு பகல் பாராது களப்பணியாற்றி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+