தெரியுமா மக்களே.. "ஜெயலலிதா பேசுகிறார்"னு "ரீல்" விட்ட நாள்.. இன்று!
ஜெயலலிதா சுயமாக சுவாசிக்கிறார்... ஸ்பீக்கர் மூலம் பேசுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நாள் இன்று.
சென்னை: ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார், ஸ்பீக்கர் மூலம் பேசுவதாக அப்பல்லோ மருத்துவமனைத்தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த ஆண்டு இதே நாளில் பகிரங்கமாக கூறினார்.
செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர்.
அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், மிகவிரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி, மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

செயற்கை சுவாசம்
அக்டோபர் 6ஆம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

வதந்தி பரப்பியவர்கள் கைது
அக்டோபர் 10 ஆம் தேதியன்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ அதன்பின்னரே ஜெயலலிதா அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றே அனைவருக்கும் தெரியவந்தது. ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. வதந்தி பரப்பியதாக பலர் கைது செய்யப்பட்டனர்.

மண்சோறு சாப்பிட்டனர்
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் முதல்வர் நலன்பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முருகன் மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், நடத்தினர். யாகங்கள், ஹோமங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர். பெண் தொண்டர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

நன்றாக பேசுகிறார்
அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பின்னர் 11 நாட்கள் அமைதி காத்த அப்பல்லோ அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா நன்றாகப் பேசி வருவதாக கூறப்பட்டது.

பிரதாப் ரெட்டி அறிக்கை
நவம்பர் 3ஆம் தேதியன்று உடல்நலத்தில் முன்னேற்றம் என அப்போலோ அறிவித்தது. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியும் இது குறித்து பேட்டியளித்தார். ஜெயலலிதாவின் நுரையீரல் தொற்று சரியாகி சுவாசக் குழாயின்றி மூச்சு விடுவதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.

அடுத்தடுத்த அறிக்கை
தான் பணிக்கு திரும்ப காத்திருப்பதாக திடீரென ஜெயலலிதா கையெழுத்துடன் கடிதம் வெளியானது. மறுபிறவி எடுத்திருப்பதாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. நன்றி கூறி அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.

ஸ்பீக்கர் மூலம் பேசுகிறார் ஜெயலலிதா
90 சதவீதம் சுயமாக சுவாசிக்கிறார். சில நிமிடங்கள் 'ஸ்பீக்கர்' பயன்படுத்தி பேசுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகின்றன. அவர் வீடு திரும்பும் தேதி முடிவு செய்யப்படவில்லை. எப்போது வீடு திரும்ப விரும்புகிறாரோ, அப்போது போகலாம். அவர் மன வலிமை கொண்டவர் என்று கூறினார் பிரதாப் ரெட்டி.

டாக்டர்கள் நம்பிக்கை வார்த்தை
இது அவரது உடல்நிலை வேகமாக முன்னேற உதவியது. வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ள அவரை ஊக்குவித்து வருகிறோம் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார். முதல்வர் நன்றாக குணமடைந்து விட்டார். இதன் காரணமாக, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்பி அரசு பணிகளை கவனிப்பார் என்று டாக்டர் பாலாஜி கூறினார்.

ஜெயலலிதா மரணம்
டாக்டர்கள் கூறிய எதுவுமே நடக்கவில்லை. டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் அலைமோதினர். பிரார்த்தனைகள் பலிக்கவில்லை. டாக்டர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் நடக்கவில்லை. கடைசியில் சடலமாகவே மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி போயஸ் கார்டன் திரும்பினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications