ஜெயலலிதா பூரண குணமடைந்தார்.. பிசியோதெரபி மட்டும்தான் தரப்படுகிறது… பொன்னையன்
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டதாகவும், தற்போது பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களின் கண்காணிப்பில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் இருந்த வந்த பிசியோதெரபிஸ்ட்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. என்றாலும், இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் விரைவில் வீடு திரும்ப அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுள்ளார். அவருக்கிருந்த நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் முற்றிலும் குணமாகிவிட்டன. தற்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண குணம் அடைந்துவிட்டதால் அரசு தொடர்பான உத்தரவுகளை அவரே பிறப்பித்து வருகிறார். முதல்வர் மீண்டும் பணிக்கு திரும்புவதற்காகவே ஓய்வெடுத்து வருகிறார் என்று பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications