பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதிலட்சுமி மறைவு: ஜெயலலிதா இரங்கல்!
சென்னை: நடிகை ஜோதிலஷ்மி மற்றும் இயக்குநர் பஞ்சு அருணாசலம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான ஜோதிலஷ்மி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (9.8.2016) காலமானார் என்ற செய்தியை அறியது நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

ஜோதிலஷ்மி அவர்கள் 1963-ம் ஆண்டில் வெளி வந்த "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நான் நடித்த 'அடிமைப்பெண்', 'நீரும் நெருப்பும்', 'தேடிவயத மாப்பிள்ளை', 'கலாட்டா கல்யாணம்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடினமான உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
ஜோதிலஷ்மி அவர்களின் மறைவு திரைப்படத் துறையினருக்குப் பேரிழப்பாகும். ஜோதிலஷ்மி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பஞ்சு அருணாசலம் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக் கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பஞ்சு அருணாசலம் அவர்கள் இன்று (9.8.2016) உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறியதும் நான் மிகவும் துயரம் அடைந்தேன். பஞ்சு அருணாசலம் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் "என்னை மறந்ததேன்....", "பொன்னெழில் பூத்தது...." ஆகிய பாடல்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சிறயத திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
நான் நடித்த "அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பஞ்சு அருணாசலம் அவர்கள் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும். பஞ்சு அருணாசலம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications