மக்களுக்கான தீபாவளி பரிசு டீசல் விலை உயர்வு: ஜெயலலிதா

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"வெங்காயத்தை உரிக்கும் போது வரும் கண்ணீரைவிட, அதன் விலையை கேட்கும் போது வரும் கண்ணீரே அதிகம் என்று மக்கள் கூறும் அளவுக்கு, வெங்காயம் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து வருகின்ற இந்தச் சூழ்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதையும், சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதையும் கூட கருத்தில் கொள்ளாமல், நாட்டு மக்களுக்கு வழங்கும் தீபாவளிப் பரிசாக டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு மத்திய அரசு உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
விலைவாசியை உயர்த்த வழிவகுக்கும் மத்திய அரசின் டீசல் விலை உயர்வுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், தவறான பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயக் கொள்கையுமே விலைவாசி உயர்விற்கு காரணம்.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரத ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. நிலைமைக்கு தகுந்தவாறு, பாரத ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியும், குறைத்தும் வருகிறது. உதாரணமாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி வீதத்தை பாரத ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் போது, பணப் புழக்கம் குறைகிறது. ஆனால், அதே சமயத்தில் மத்திய அரசின் தவறான நிதிக் கொள்கை காரணமாக பொருட்களின் விலை அதிகமாகி, அது மீண்டும் பணவீக்கத்தை உயர்த்த வழிவகுக்கிறது.
எனவே, பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு என இரு தாக்குதல்களை சாமானிய மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சர்வதேச விலையுடன் அமெரிக்க டாலர் அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு இணைப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இதன் வாயிலாக, ரயில்வே சரக்குக் கட்டணம், வாகனக் கட்டணம் என அனைத்தும் உயர்ந்து, காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வழிவகுக்கிறது.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பாரத ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து செயல்படாமை ஆகியவை தான் தற்போதைய விலைவாசி உயர்விற்குக் காரணமாகும். இதன் விளைவாக, ஏழை, எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு மிக மிகக் குறைவு. எங்களைப் பொறுத்தவரையில், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொருட்கள் கடத்தப்படுவதும், பதுக்கப்படுவதும் தடுக்கப்பட்டு வருவதோடு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு மானியம் அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் ஒரே சமயத்தில் லிட்டருக்கு 11 ரூபாய் அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரோ, சந்தை விலையை தாங்கக் கூடிய வலிமை மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் நிறுவனங்களிடம் உள்ளது என்றும், இல்லையென்றாலும், அந்தச் சுமையை வாடிக்கையாளர் மீது சுமத்திவிடலாம் என்றும் கூறினார். அதாவது, பேருந்துக் கட்டணங்களை உயர்த்தலாம் என்று கூறினார். ஆனால், பயணிகள் கட்டணத்தை எனது தலைமையிலான அரசு உயர்த்தவில்லை.
நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஓய்வூதியதாரர்களுக்கு தர வேண்டிய பல கோடி ரூபாய் ஓய்வூதியப் பலன்கள் கொடுக்கப்படாமல் இருந்தன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகளால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முற்றிலும் முடங்கப்படுவதை தடுக்கும் வகையில், 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேருந்துக் கட்டணங்கள் சிறிதளவு உயர்த்தப்பட்டன. அப்போதும் இழப்பு ஈடு செய்யப்படவில்லை. ஆனாலும், அதன் பின்னர் பேருந்துக் கட்டணங்கள் ஏற்றப்படவில்லை.
கடைசியாகப் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 43 ரூபாய் 95 காசு என்று இருந்த டீசல் விலை, தற்போது 56 ரூபாய் 61 காசாக உயர்ந்துள்ளது. அதாவது, 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 29 விழுக்காடு அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. பிற மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம் அவ்வப்போது ஏற்படும் டீசல் விலை உயர்விற்கு ஏற்ப, பேருந்துக் கட்டணங்களை உயர்த்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தச் சுமை மக்கள் மீது திணிக்கப்படவில்லை. இந்தச் சுமையை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக சென்ற ஆண்டு 200 கோடி ரூபாயை எனது அரசு வழங்கியது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாயை எனது அரசு ஒதுக்கியுள்ளது.
இப்படி மாநில அரசின் சக்திக்கு உட்பட்டு, மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, இன்னும் சொல்லப் போனால், சில நேர்வுகளில் அதையும் மீறி, விலைவாசியை குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதையெல்லாம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. ஆனால், வானளாவிய அதிகாரங்களையும், வருவாயையும் வைத்துக் கொண்டுள்ள மத்திய அரசு பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் நடந்து கொள்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். தற்போதைய டீசல் விலை உயர்வே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் தற்போதைய டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விலையை மாதா மாதம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை அன்றாடம் ஆராய்ந்து அவற்றிக்கேற்ப நடவடிக்கை எடுக்காமல் நாட்டை சீரழிக்கும் அரசுக்கு எதிராக வாக்கு எனும் அம்பை எய்த மக்கள் தயாராகிவிட்டார்கள். இதன் மூலம், ஆட்சி மாறும், மக்களின் நிலையும் உயரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications