ஆபாச படம் எடுத்து கால்டாக்ஸி டிரைவரை மிரட்டி பணம் பறித்த துணை நடிகை கைது
சென்னை: சென்னை அருகே கால் டாக்ஸி டிரைவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் துணை நடிகை ஒருவரும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ராமஜெயம் (45). இவர் கானத்தூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘உத்தண்டியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த போது, தன்னை வீட்டில் அடைத்து வைத்து ஆபாசமாக படம் எடுத்து அப்பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பணத்தைப் பறித்துக் கொண்டதாக' அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கால்டாக்சியில் சென்ற போது அப்பெண்ணிற்கும், ராமஜெயத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போன் மூலம் ராமஜெயம் அப்பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க அப்பெண் தனது நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ராமஜெயத்தை வரவழைத்து தன்னுடைய வீட்டில் வைத்து தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி அனுப்பியதுடன் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தையும் பறித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அப்பெண் துணை நடிகை எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர் எந்தப்படத்தில் நடித்தார், அவரது பெயர் என்ன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications