வன்முறையாக மாறிய போராட்டம்! கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு! போலீஸ் கட்டுப்பாட்டில் தனியார் பள்ளி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவம் காரணமாக கள்ளக்குறிச்சி தலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் கனியாமூரில் தனியார்ப் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மரணம்
இருப்பினும், பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படும் இந்த விளக்கத்தை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்கள், கடந்த 5 நாட்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்
இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் ஒப்படைக்கப் போராட்டம் நடத்தினர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், அங்கு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டது. போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளி முழுவதும் அடித்துச் சூறையாடப்பட்டது.

வன்முறை
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதுமட்டுமின்றி நிலைமையைக் கட்டுப்படுத்த அண்டை மாவட்டங்களில் இருந்தும் போலீசார் அங்கு விரைந்தனர். இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் உள்துறைச் செயலாளரும், போலீஸ் டிஜிபியும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர்.

144 தடை உத்தரவு
இந்தச் சூழலில் கனியாமூரில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், சின்ன சேலம், நயினார்பாளையம் பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கனியாமூரை சுற்றி 5 கிமீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

விளக்கம்
மேலும் கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், "வதந்தி காரணமாக இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டு உள்ளனர். இப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளோம். சட்ட ஒழுங்கை மேம்படுத்த உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications