அரசு தரப்பிலிருந்து பாயும் வழக்குகள்.. ரசிகர்களை காப்பாற்ற கமல் பலே ஐடியா!
சட்ட நடவடிக்கைகளை சமாளிக்க மாவட்டந்தோறும் தமது இயக்கத்தில் உள்ள 25 வக்கீல்களை ஒழு குழுவாக நியமிக்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு, அரசியல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நடிகர் கமல்ஹாசன் அதிரடியான கருத்துக்களை டிவிட்டர் மூலமும், பேட்டிகள் மூலமும் வெளிப்படுத்தி வருகிறார்.
வெளிப்படையாகவே சசிகலா தரப்புக்கு எதிராக டிவிட்டரில் கமல் கருத்துக்களை கூறியது, ஆளும் கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, புதுக்கோட்டையில் கமல் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மணிகண்டன், பிரபாகரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

களமிறங்கிய கமல்
இதனால் கோபமடைந்த கமல் அதையும் டிவிட்டரில் தெரிவித்தார். மேலும், தனது ரசிகர்களை காக்க களமிறங்கிவிட்டார்.
இதுபோன்ற கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் தனது நற்பணி இயக்கத்தில் உள்ள வக்கீல்களை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

குரல் கொடுக்க தயார்
அதன்படி பெரம்பலூர் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் சிலர் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து திரும்பினர். அப்போது, இனி தான் அரசியல் விவகாரம் பற்றி அவ்வப்போது குரல் கொடுப்பேன் என கூறியதாகவும், அதற்கு ஏற்ப உங்கள் ஊரில் உள்ள மக்களின் பிரச்னைகளை எனக்கு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

வக்கீல்கள் குழு
தனது குரல் காரணமாக, காரணமாக நற்பணி இயக்கத்தினருக்கு வழக்கு, கைது உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் வரலாம். அதை சமாளிக்க மாவட்டந்தோறும் நமது இயக்கத்தில் உள்ள 25 வக்கீல்களை ஒழு குழுவாக நியமிக்க வேண்டும். அந்த வக்கீல்கள் குழு, சட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு, நமது இயக்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் கமல்.

ரூ.2 கோடி உதவி
தமது நற்பணி இயக்கம் சார்பில் ரசிகர்கள் இதுவரை ரூ.20 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதை நினைவு கூர்ந்த கமல், மேலும் ரூ.2 கோடியை வழங்கியதோடு, அதை வைத்து அறக்கட்டளை ஏற்படுத்தி மாவட்டம் வாரியாக பிரித்து, மக்கள் பணிகளுக்கு செலவிடுங்கள் என்று கூறியுள்ளார். கமலின் மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் அரசியலில் குதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications