"அம்மா"வின் ஸ்ரீரங்கத்தை விட்டு விட்டு தூத்துக்குடி கிராமத்திற்கு மாறிய கனிமொழி....பின்னணி என்ன?
தூத்துக்குடி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றை தத்தெடுக்கப் போவதாக கூறி வந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தற்போது திடீரென தூத்துக்குடிப் பக்கம் உள்ள கிராமத்தை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
‘ஒரு எம்.பி., ஒரு கிராமம்' திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு எம்.பி.,க்களும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வாரணாசியில் ஜெயாப்பூர் கிராமத்தை அவர் தத்தெடுத்துள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ஒரு கிராம பஞ்சாயத்தை தத்தெடுத்துள்ளார். நடிகையும், எம்.பியுமான ஹேமாமாலினி மதுரா தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அந்த வரிசையில் தி.மு.க. ராஜ்யசபா எம்.பி கனிமொழியும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி யூனியன் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை தத்தெடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் நேற்று ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இப்பகுதி மக்கள் தங்களது கிராமத்தை தத்தெடுக்குமாறு என்னிடம் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் தத்தெடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள அனைத்து கிராமங்களையும் முன்னோடி கிராமங்களாக தரம் உயர்த்துவேன்.
இப்பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லாததால், எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கருமேனி-நம்பியாறு இணைப்பு திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இதனால் இப்பகுதி மிகவும் வறட்சி பாதித்த பகுதியாக உள்ளது.
எனவே நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, இங்குள்ள கிராமங்களில் மண் பரிசோதனை செய்து, இங்கு வளரக்கூடிய தகுதியான மரங்களை கண்டறிந்து, அவற்றை வளர்க்க ஏற்பாடு செய்வேன். இங்குள்ள மண் வளத்தை மேம்படுத்தி தருவேன்.
மத்திய அரசு அறிவிக்கும் பல நல்ல திட்டங்களை மாநில அரசு அதிகாரிகள் செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர். உங்களின் ஒத்துழைப்போடு அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, நமது கிராமங்களை இந்தியாவிலேயே முன்னோடி கிராமங்களாக மாற்றுவேன்.
இங்கு கல்வி, குடிநீர், சுகாதாரம், வாறுகால், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்படும். என்றும் உங்களோடு இருந்து செயல்படுவேன் என்றார் கனிமொழி எம்.பி.
முன்னதாக ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க இடம் பார்த்துக் கொண்டிருந்தார் கனிமொழி. இதனால் அதிமுகவினரே கூட டென்ஷனாகி காணப்பட்டனர். மேலும் ஸ்டாலின் தரப்பும் கூட கனிமொழியின் செயல்பாடுகளை ரசிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனிமொழி இடம் பெயர்ந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாடார் சமுதாயத்தினர் நிறைந்த பகுதியாகும். கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது நினைவிருக்கலாம். எனவே எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடிக்கு கனிமொழி இடம் பெயர்ந்திருக்கலாமோ என்று கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications