கோட்டம் மாற்றத்தை எதிர்க்கும் கேரளாவுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் மதுரை மண்டலத்தில் இணைப்பதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ள காரணத்தால் இந்த பகுதிகள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிநிகளும் இப்பிராச்தியத்தைப் பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும்; கடந்த 36 ஆண்டுகளாக எடுக்கவில்லை. இந்த பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வருவதோடு நின்று விடுகிறது. தற்போது இந்த கோரிக்கை மத்திய அமைச்சர் பொன்னாரின் சீரிய முயற்சியால் அடுத்த கட்ட நிலைக்கு சென்றுள்ளது. இந்த பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது.

Kanyakumari District Railway Passengers' Association has condemned on kerala

திருவனந்தபுரம் கோட்ட அமைந்த வரலாறு:-

திருவனந்தபுரம் ரயில் கோட்டம் இந்தியாவில் 53 கோட்டமாக 1978-79 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 02-10-1979 அன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. திருவனந்தபுரம் கோட்டம் பாலக்காடு கோட்டத்தில் உள்ள ஷொர்ணூர் - கொச்சி துறைமுகம் மற்றும் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள எர்ணாகுளம் - திருவனந்தபுரம் - கன்னியாகுமரி ரயில் வழித்தடங்களை இணைத்து இந்த கோட்டம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த கோட்டத்தில் மொத்தம் 624.730 கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் 161.கி.மீ தூரத்துக்கு ரயில்வழித்தடம் அமைக்கப்பட்டு வரும் வேளையில் ரகசியமாக கேரளாவை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன் தமிழக பகுதிகளையும் இணைத்து திருவனந்தபுரம் கோட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த வேளையில் ரயிலை பற்றிய போதிய அறிவின்மை குமரி மாவட்ட மக்களுக்கு கிடையாது. இது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. குமரி மாவட்ட ரயில் தடங்கள் அமைக்கபட்டு சில காலங்கள் மதுரை கோட்டத்தின் கீழ் இருந்தது. அவ்வமையம் திருநெல்வேலியிலிருந்து இருப்பு பாதை இணைப்பு நாகர்கோவிலுக்கு இல்லாதிருந்ததனால், இதன் நிர்வாகப் பொறுப்பை 1979 அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன், ஒரு நிபந்தனையுடன் இணைக்கப்பட்டது. நிபந்தனை யாதெனில், திருநெல்வேலி - நாகர்கோவில் இணைப்பு முடிந்த உடனே குமரி மாவட்ட உள்ள அனைத்து ரயில் போக்குவரத்து நிர்வாகத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்து விட வேண்டும் என்பதேயாகும்.

நாகர்கோவில் - திருநெல்வேலி 73.29கி.மீ தூரம் ரயில்வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடம் துவங்கப்பட்டதும் குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்தாமல் நிர்வாகத்தை திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடர்ந்து நீடிக்கச் செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் புதிதாக துவங்கப்ட்ட ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் - கொச்சி- சொர்ணூர் ரயில் வழி தடங்கள் அனைத்தும் 1979 ஆண்டு வரை மதுரை கோட்டத்தில் தான் இருந்து வந்தது. அக்டோபர் 1979 02ம் தேதி அன்று மதுரை கோட்டத்தில் உள்ள கேரளா பகுதிகளை பிரித்து திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய ரயில் கோட்டம் ஏற்படுத்தபட்டது. இதற்கு தமிழக மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் பகுதியை அவர்கள் பிரித்து கொண்டு செல்கின்றனர் என்ற விட்டு விட்டனர். இந்த பெருந்தன்மை போல திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளை பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்கும் போதும் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்ட வேண்டிய அவசியல் இல்லை.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கி.மீ தூரம் உள்ள இருப்புபாதை வழித்தடத்தில் கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் 87 கி.மீ தூரமும், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ தூரம் ஆக மொத்தம் 161 கி.மீ தூரம் உள்ள ரயில்வே இருப்புபாதை சுமார் 25 சதமானம் நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் வருகின்றது. இந்த பாதையை மதுரை கோட்டத்துடண் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே வாரியம் இந்த பகுதிகளை மதுரை கோட்டத்துடண் இணைக்க வேண்டும் என்று ஆரம்பகட்ட பணிகளை துவங்கி சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயிடம் கருத்து கேட்டுள்ளது.

இதன்படி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள இந்த 161 கி.மீ தூரத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்துவிட்டு மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள கேரளா பகுதிகளான கொல்லம் - செங்கோட்டை வழித்தடத்தை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும் என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இரண்டு கோட்டமும் நிர்வாக வசதிக்காக தங்கள் வழித்தடத்ததை மாற்றம் செய்ய இருக்கிறார்கள். ரயில்வே வாரியாத்தின் இந்த திட்டத்தின் படி வழித்தடத்தை மாற்றம் செய்யும் போது மதுரை அல்லது திருவனந்தபுரம் என எந்த ஒரு கோட்டத்துக்கும் எந்த ஒரு பாதிப்பு இருக்காது. இந்த கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ தூர பாதையில் கன்னியாகுமரி முதல் பாறசாலை வரை உள்ள தமிழக பகுதி 57 கி.மீ தூரமும், பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள கேரளாவில் உள்ள பாதை 30கி.மீ தூரமும் உள்ளது. இதில் அதிக தூரம் தமிழகத்தில் உள்ள காரணத்தால்தான் ரயில்வே வாரியம் இந்த பகுதி முழுவதையும் மதுரை கோட்டத்துடன் இணைக்க பரிந்துரை செய்துள்ளது.

கேரளாவில் அவதூறு பிரச்சாரம்:-

ரயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள் குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் போதும் எதாவது ஆதரவாக குரல் கொடுத்தார்களா என்றால் இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடத்தை மதுரை கோட்டத்துடன் இணைப்பதில் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பர்களுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. திருவன்ந்தபுரம் கோட்த்திலிருந்து இந்த பகுதிகயை பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைத்துவிட்டு, மதுரை கோட்டத்தில் உள்ள கேரளா பகுதிகளை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்படும். இதனால் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு எந்த பாதிப்பும் இருக்க போவது இல்லை.

கேரளாவில் உள்ள பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்த கோவை, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது பாலகாடு கோட்டத்தின் கீழ் உள்ள மங்களுர் பகுதி மக்கள் தங்கள் பகுதியை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து கொங்கன் ரயில்வே அல்லது தென்மேற்கு ரயில்வேயுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது மட்டுமில்லாமல் பொள்ளாச்சி - போத்தனூர் பகுதி மக்கள் அந்த பகுதியை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க துவங்கிவிட்டனர். ஏன் இவ்வாறு கேரளாவின் அருகில் உள்ள அனைத்து பகுதி ரயில்வே வழித்தடங்களில் உள்ள பகுதி மக்கள் கேரளா கோட்டத்துடன் இருப்பதை விரும்பவில்லை என்பதை ரயில்வே வாரியம் விசாரிக்கப்பட்டு இந்த பிரச்சனையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள குமரி மற்றும் நெல்லை மாவட்ட வழி தடங்களை திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து பிரிக்க வேண்டும்; என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மைதான் நாங்கள் ஒத்து கொள்கிறோம். ஏன் பிரிக்க வேண்டும் என்று சிந்தித்தார்கள அவர்கள் இல்லையே! குமரி மாவட்டத்துக்கு தேவையான புதிய ரயில் சேவைகள் அதில் குறிப்பாக திருநெல்வேலி வழியாக அதிக ரயில்கள், இங்குள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்தல், ரயில் முனைய வசதிகளை அதிகப்படுத்துதல், ரயில் நிலையங்களில் வருமானத்தின் அடிப்படையில் செய்யப்படும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல் போன்ற பல ரயில்வே வளர்ச்சி திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்றி தந்தால் யாருமே கோட்டத்தை பிரிக்கவேண்டும் என்று கேட்க மாட்டார்கள். கேரளத்துக்கு மேற்குறிப்பிடபட்டுள்ள அனைத்து திட்டங்களும் செய்துவிட்டு தமிழக ரயில் தடங்களை புறக்கணிப்பதினால் தான் திருவனந்தபுரம் கோட்டத்தை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள், மக்கள் பிரதிந்திகளால் எழுப்பபட்டுள்ளது.

முரண்பாடான கோரிக்கை:-

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளை பிரிக்க கேரளா முதல்வர் உட்பட பலர் எதிர்ப்ப தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் தான் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து கேரளாவை பிரித்து புதிதாக கேரளாவுக்கு என தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அவர்கள் தமிழக மண்டலமான தெற்கு ரயில்வேயின் கீழ் இருக்கமாட்டார்களாம் ஆனால் தமிழக பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இருக்க வேண்டமாம. இவர்களின் கோரிக்கையே சரியான முரண்பாடாக உள்ளது.

ரயில்வே வாரியத்தின் கடிதம் வெளியே லீக்:-

ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு கோட்டத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் திட்டத்துக்கு கடிதம் அனுப்பியது. இந்த கடிதம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கருத்துக்காக இங்கு வந்த கடிதத்தை அங்கு பணிபுரியும் கேரளாவை சார்ந்த அதிகாரிகள் வேண்டும் என்றே வெயியே கசிய விட்டு பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளுக்கு அனுப்பியுள்ளனர். இந்த துறை சார்ந்த கடிதத்தை வெளியே கசியவிட்ட அதிகாரி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து நீரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.

ரயில்வே வாரியம் இந்த பகுதிகளில் உள்ள இருப்புபாதை வழித்தடங்களை நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்க தெற்கு ரயில்வேக்கு பலமுறைகளில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி 02-11-2015, 1-12-2015, 07,01-2016, 23-08-2016, 20-02-2017 ஆகிய தேதிகளில் ஐந்து முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு முறை கூட இந்த கடிதங்களுக்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் பதில் அனுப்பவில்லை. இது தெற்கு ரயில்வே மண்டலத்தில் இஞ்சினியறிங் பிரிவில் பணிபுரியும் கேரளாவை சார்ந்த அதிகாரிகள் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரயில்வே வாரியத்தின் கடிதங்களுக்கு பதில் அனுப்பாமல் இருந்துள்ளனர். இது போன்ற அதிகாரிகளை கண்டுபிடித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவுக்கு என்று தனி ரயில்வே மண்டலம் வேண்டும் என்று கோரிக்கை கேரளா அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இதைபோல் கேரளாவுக்கு என தனி ரயில் மண்டலத்துக்கு எப்போதுமே தமிழக மக்கள் எதிரி அல்ல. அவர்களுக்கு தனி மண்டலம் வேண்டும் என்றால் கேரளா கோட்டங்களையும், கேரளாவில் உள்ள ரயில் வழி தடங்களையும் உள்ளடக்கி தனி மண்டலம் அமைத்து கொள்ளட்டும். ஏற்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழக ரயில்வே கோட்டங்களான சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றை எந்த மாற்றமும் செய்யாமல் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயியே நீடிக்க வேண்டும். இதைபோல் கேரளா கோட்டத்தில் உள்ள தமிழக ரயில் பகுதிகளான குமரி, நெல்லை மாவட்ட ரயில் வழி தடங்களையும் மற்றும் பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி - கிணத்துகடவு ரயில் வழி தடங்களை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைத்து விட்டு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ளட்டும்.

கேரளாவில் ஓர் ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றால் மூன்று ரயில்வே கோட்டங்கள் வேண்டும். தற்போது கேரளாவில் திருவனந்தபுரம் (625கி.மீ) மற்றும் பாலக்காடு (578 கி.மீ) என இரண்டு ரயில் கோட்டங்கள் மட்டுமே உள்ளது. கேரளாவில் புதிய ரயில்வழி தடங்கள் திட்டங்கள் புதிதாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. குமரி மாவட்ட ரயில்வழித்தடங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள போதே பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலமை மாறி கோட்டம் மற்றும் மண்டலம் இரண்டுமே கேரளாவின் கீழ் இருந்தால் குமரி மாவட்ட ரயில்வே துறை வளர்ச்சி என்பது நினைத்துபாக்க முடியாத அளவில் அகல பாதாளத்துக்கு சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் குமரி மாவட்ட மக்கள் மத்திய அரசிடம் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள தமிழக ரயில்வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைத்துவிட்டு கேரளாவுக்கு என தனி மண்டலம் அமைத்து கொள்ளட்டும். நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே இருப்புபாதைகளாக உள்ள கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ வழித்தடம் உள்ளது. இந்த நாகர்கோவில் துணைகோட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே இருப்புபாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

கேரளாவின் புத்திசாலிதனம்;:-

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகள் அதாவது 161 கி.மீ தூரம் மதுரை கோட்டத்துடன் இணைந்துவிட்டால் கோட்டத்தில் வழித்தடம் 464 கி.மீ தூரமாக குறைந்துவிடும். இதைப்போல் பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள மங்களுர் பகுதி மைசூர் கோட்டத்துடனும் மற்றம் பொள்ளாச்சி - போத்தனூர் பாதை சேலம் கோட்டத்துடனும் இணைந்துவிட்டால் சுமார் 450 கி.மீ தூரமாக குறைந்துவிடும். இது மட்டுமில்லாமல் இந்த இரண்டு கோட்டங்களின் வருமானமும் கணிசமாக குறைந்துவிடும். இவ்வாறு குறைந்தால் இந்த இரண்டு கோட்டத்தையும் இணைத்து ஒரு கோட்டமாக ரயில்வே வாரியம் மாற்றியமைத்துவிடும். இதை தவிர்க்கவே கேரளா அரசியல்வாதிகள் கேரளாவுக்கு என தனி ரயில்வே மண்டலம் வேண்டும் என்று கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

கேரளத்தவரின் ஒற்றுமை:-

கேரள மாநிலத்தை பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்கள் மாநில நலனுக்கு, மக்கள் நலனுக்கு எதாவது தேவையென்றால் அனைத்து. கவனிக்க அனைத்து கட்சியினரும் தங்கள் பிரச்சனைகளை மறந்து ஒன்று திரண்டு எதிர்கட்சி முதல்வர் உட்ப்பட மத்திய அரசிடம் வாதாடி பெற்றுக்கொள்கிறார்கள். கேரள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, ஒற்றுமை என்பது நம்மிடம் சுத்தமாக இல்லை. அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒவ்வொரு சிறு பிரச்சனையையும் மிக மிக குறுகிய மனப்பான்மையுடன் அணுகி, ஒன்றுமேயில்லாத பிரச்சனைகளை கூட ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காயும் இயல்பு மாறாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய பல ரயில்கள், பல ரயில்பாதைகள், மின்மயமாக்கல் போன்றவை ஆமை வேகத்தில் இயங்கி வருகின்றன. அழுகிற குழந்தைக்கு தான் பால் என்பதை போல, வற்புறுத்திக்கொண்டிருப்பவர்களை முதலில் கவனித்துக்கொண்டால் மற்றவர்களை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலை மத்திய ரயில்வே வாரியத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்தையும், விஷமமாகவும், குறுகிய மனப்பான்மையுடனும், தனிப்பட்ட அரசியல் விஷயமாகவும், யார் மீது குற்றம் சுமத்தலாம் என்கிற காரண தேடலுடனும் மட்டுமே அணுகிக்கொண்டிருப்பதற்கு மிக பெரிய உதாரண பட்டியலே இருக்கிறது. இந்த கோட்டம் மாற்றம் விஷயத்திலாவது தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழகநலன் பாதுகாக்கப்படும்.

எவ்வாறு குமரி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

1. கடந்த 20 வருட கோரிக்கையாக திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் குமரிக்கு நீட்டிப்பு இதுவரை செய்யவில்லை
2. குமரியிலிருந்து சுற்றுபாதையில் கேரளா வழியாக நாகர்கோவில் - ஷாலிமர், கன்னியாகுமரி -திப்ருகர் போன்ற ரயில்கள் இயக்கம்
3. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிட்லைன்கள் பராமரிப்பில் கேரளாவில் உள்ள அனைத்து பயணிகள் ரயில்களும் இங்கு பராமரிக்கப்படுகிறது. இதனால் புதிய ரயில்கள் இயக்க முடியாமல் உள்ளது
4. நாகர்கோவில் டிப்போவில் கடும் ஊழியர் பற்றாக்குறையாக உள்ளது. எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை
5. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் அடிப்படைகட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம் செய்யவில்லை
6. நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கம் புதிய பயணிகள் ரயில்கள் இயக்க கோட்டம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை
7. மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மலையாள மொழி திணிக்கப்படுகிறது.
8. நாகர்கோவிலிருந்து கேரளா பயணிகள் வசதிக்காக சுற்றுபாதையில் அதிக அளவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
9. குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படாமல் கேரளாவுக்கு பயன்படும் படியாக காலஅட்டவணை அமைத்து இரவு நேர ரயில்கள் இயக்கபடுகிறது.
10. நாகர்கோவிலிருந்து இயக்கப்பட்ட சென்னை சிறப்பு ரயில் இதுவரை நிரந்தரமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கேரளாவில் பல ரயில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
11. கேரளாவிலிருந்து கொங்கன்பாதையில் இயக்கப்படும் 15 ரயில்களில் ஒரு ரயில் கூட குமரிக்கு நீட்டிப்பு செய்யப்படவில்லை.
12. நாகர்கோவில் டவுண் மற்றும் மேலபாளையம் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் கோட்டத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
13. கோட்டத்தில் உள்ள நாகர்கோலில் ரயில் நிலையத்தில் மட்டும் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது.
14. குமரியிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் கோரிக்கை வைக்காமலே புதிய ரயில்கள் வரும் ஆனால் நெல்லை மார்க்கம் கோரிக்கை வைத்தால் எந்த ரயிலும் வராது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே ரயில்வே மண்டலம் 1951-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே மண்டலம் ஆகும். இந்த மண்டலம் அமைக்கும் தற்போதைய தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9654 கி.மீ தூரத்துக்கு இருப்புபாதைகள் இந்த மண்டலத்தில் சேர்க்கப்பட்டன. தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்தில் 5079 கி.மீ தூரத்துக்கு இருப்புபாதைகளும் ஆறு கோட்டங்களும் உள்ளன.

மாநிலங்கள் வாரியாக

தமிழ்நாடு - 3846 கி.மீ
புதுச்சேரி - 22
ஆந்திரா - 121
கேரளா - 1050
கர்நாடகம் - 40
மொத்தம் - 5079

கோட்டங்கள் வாரியாக

சென்னை - 698 கி.மீ
சேலம் - 858 கி.மீ
பாலக்காடு - 578 கி.மீ
திருவனந்தபுரம் - 625 கி.மீ
திருச்சி - 1027 கி.மீ
மதுரை - 1293 கி.மீ

1. திருவனந்தபுரம் - மங்களுர் 16604/16603 மாவேலி ரயிலை கன்னியாகுமரி அல்லது தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
2. திருவனந்தபுரம் - மும்பை 22114/22113 வாரத்துக்கு இரண்டுநாள் ரயிலை திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
3. கொச்சுவேலி - காரைக்கால், கொச்சுவேலி - புதுச்சேரி சிறப்பு ரயில்களை நிரந்தர தினசரி ரயிலாக இயக்க வேண்டும்
4. நாகர்கோவில் - சென்னை ஞாயிறு சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.
5. நாகர்கோவில் - சென்னை எழும்பூர், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில்களை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும்.
6. கன்னியாகுமரி - நிசாமுதீன் வாரத்துக்கு இரண்டுநாள் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
7. கன்னியாகுமரியிலிருந்து திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.
8. நாகர்கோவில் - மும்பை வாரத்துக்கு நான்குநாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்
9. கன்னியாகுமரி -ஹவுரா வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் அல்லது திருச்சி -ஹவுரா ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்
10. நாகர்கோவில் - கோவை வழி பொள்ளாச்சி ஜனசாதாப்தி ரயில் இயக்க வேண்டும்
11. கன்னியாகுமரி - மேட்டுபாளையம் வழி பொள்ளாச்சி தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும்.
12. கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரத்துக்கு மூன்றநாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
13. மதுரை - சென்னை டோரான்டோ ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்
14. எர்ணாகுளம் - மும்பை டோரோண்டா ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்
15. நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயிலை காலஅட்டவணையை மாற்றம் செய்து கன்னியாகுமரி - வாஸ்கோடகாமா தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் என இயக்க வேண்டும்
16. திருவனந்தபுரம் - மதுரை பகல்நேர இன்டர்சிட்டி ரயில் கொல்லம் - கன்னியாகுமரி மெமு ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி - மும்பை தினசரி ரயில், கன்னியாகுமரி - திருப்புகர் வாராந்திர ரயில், நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயில், கன்னியாகுமரி - ஜம்முதாவி வாராந்திர ரயில், திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர ரயில்; போன்ற ரயில்கள் சுற்று பாதையில் செல்லும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்களால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த உபயோகமும் இல்லை. இந்த ரயில்களை திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டு அதே ஊர்களுக்கு கீழே குறிப்பிடபட்டுள்ள தடங்களில் ரயில்கள் இயக்க வேண்டும்.
17. சென்னை - பிலாஸ்பூர்(12852/12851) ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
18. சென்னை - திருபுகர் (15929/15930) ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
19. சென்னை - ஷாலிமார் (22825/22826 ) ரயிலை மதுரை வழியாக நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
20. திருநெல்வேலியிருந்து வாரத்துக்கு இரண்டு நாள் இயங்கும் ஜம்முதாவி செல்லும் (16787/16788 ) ரயிலை நாகர்கோவில் வழியாக ஒரு நாள் கன்னியாகுமரிக்கும் ஒரு நாள் திருவனந்தபுரத்துக்கும் இயக்குமாறு மாற்றி அமைத்து இயக்க வேண்டும்.
21. கன்னியாகுமரி - மும்பை தினசரி ரயிலை அதன் வழித்தடத்தை மாற்றி கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களுர், மட்கான் வழியாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு இயக்குவதால் இந்த ரயில் 30 மணி நேரத்தில் மும்பை சென்றுவிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+