தமிழக போலீஸ் மீதான தலைமை நீதிபதியின் விமர்சன விவகாரம்... தொடரும் ஜெ.- கருணாநிதி அக்கப்போர்!
சென்னை: தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்று தலைமை நீதிபதி கூறியதாக ஏடுகளில் வந்த செய்தி உண்மை என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து பற்றி நான் விடுத்த அறிக்கையைக் குறிப்பிட்டு ஜெயலலிதா, அந்த வழக்கிலே இணைந்து கொள்ளத் தயாரா என்று எனக்கு சவால் விடுத்துள்ளார். தலைமை நீதிபதி அவ்வாறு தமிழகக் காவல் துறை நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கவில்லை என்றும், அவர் தெரிவித்ததாக ஏடுகளில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ஜெயலலிதா பேரவையில் கூறும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பு அளிக்க தமிழகப் போலீஸ் தவறி விட்டது என்றும் கருணாநிதி சொல்கிறார். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் போடப்பட வேண்டும் என்கிறார். இது தொடர்பாக வழக்கில் கருணாநிதி நினைத்தால் தன்னை இணைத்துக் கொள்ளத் தயாரா? இதற்கு மனு தாக்கல் செய்வாரா? நான் கருணாநிதிக்கு இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சொன்னது இது...
'காவல் துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணிவகுத்து வந்து கொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல இன்று ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது' என்று செய்திகளில் வெளிவந்த தலைமை நீதிபதியின் கருத்துக்கு இந்த அரசின் பதில் என்ன என்று தான் கேட்டிருக்கிறேன்.

சொல்லாததை சொன்ன ஜெ.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா பேரவையில், "சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், பாதுகாப்பு அளிக்க தமிழகப் போலீஸ் தவறி விட்டது என்றும் கருணாநிதி சொல்கிறார். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் போடப்பட வேண்டும் என்கிறார்" என்றெல்லாம் நான் கூறாததைக் கூறியதாக பேரவையிலேயே உண்மைக்கு மாறாக ஒரு முதல்வரே பேசி, அதையொட்டி எனக்கு சவாலும் விடுக்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்ன தான் நினைப்பது?

ஏடுகளில் வந்தவைதானே..
இந்த வழக்கே நீதிபதிகள் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ததன் மூலம் தொடங்கியதாகும். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) அல்லது அதுபோன்ற ஓர் அமைப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதுடன், நீதிமன்றப் பணி சுமுகமாக நடைபெறவும் வழி வகுக்கும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தெரிவித்த இந்தக் கருத்துகளும் உண்மை இல்லையா? நான் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் அனைத்துமே நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்த கருத்துகள்தான்.

மன்னிப்பு கேட்பாரா?
இதைக் கூறுவதற்காக நான் இந்த வழக்கில் இணைந்து நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டுமென்பது தான் ஜெயலலிதாவின் சவால் என்றால் அதற்கு நான் தயார். நான் தெரிவித்த கருத்துகள் நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்தவை என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்ளுமேயானால், முதல்வர் ஜெயலலிதா அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கத் தயாரா?
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications