வெள்ளநிவாரணத்திற்கு 1 மாத சம்பளம்: திமுக எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை தரவேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், அண்மையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணத்திற்காக, திமுக கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கிடுக என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல கனமழையால், தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நிவாரணமாக குவிந்து வருகின்றன. அதிமுக எம்.பி.க்கள் நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவிட அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளம் வழங்கவேண்டும் என்று கட்சித்தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications