திருச்சி மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பி வா.. தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi calls DMK cadres to attend Trichy meet en masse
சென்னை: பிப்ரவரி மாதம் 15, 16-ல் திருச்சியில் மாநில மாநாடு. மாநாட்டிற்குப் புறப்பட இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்; இப்போதே பயண ஏற்பாட்டினைத் தொடங்கி விடுங்கள். குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதுதானே நமது வழக்கம். திருச்சியில் மாநாடு என்றால் எப்போதும் அது திருப்பு முனை மாநாடு தான் என்று திமுகவினருக்குத் தெரிவித்துள்ளார் கட்சித் தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்...

தி.மு.க. மாநாடுகள் என்ற நீண்ட வரலாற்று வரிசையில்தான் 2014 பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் திருச்சியில் பத்தாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த முறை மாநாடு நடைபெறுகின்ற நேரம், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக வருகின்ற காரணத்தால் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

திருச்சியிலே நடைபெற்ற மாநாட்டிலேதான், அண்ணா காலத்தில் தி.மு.க. தேர்தலிலே போட்டியிடலாமா? வேண்டாமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பி கூடியிருந்த மாநில மாநாட்டு மக்களிடத்திலே, 'மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும், நாம் தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா? என்பதற்கு, இந்த மாநாட்டிலே இருக்கின்ற கழகத்தோழர்களே! நீங்கள் உங்களுடைய முடிவை அறிவியுங்கள்' என்று மாநாட்டுப் பந்தலிலே பெட்டிகளை வைத்து வாக்களிக்கச்செய்து அப்பெட்டிகளிலே விழுந்த வாக்குகளிலே, "தேர்தலில் நிற்கலாம் - தேர்தலிலே ஈடுபடலாம்" என்பதற்காக விழுந்த வாக்குகள்தான் அதிகமாக இருந்த காரணத்தால், திருச்சியில் நடந்த அந்த மாநில மாநாட்டிலேதான், அண்ணா இருந்து நடத்திய அந்த மாநாட்டிலேதான், தி.மு.க. தேர்தலிலே நிற்கலாம் என்ற ஜனநாயக ரீதியான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநாட்டில் எடுத்த அந்த முடிவின்படி, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதே திருச்சியில் நம்முடைய மாநில மாநாட்டை நடத்த எண்ணியிருக்கிறோம். திருச்சி மாநாடு பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது. அண்ணாவிற்குப்பிறகு, தி.மு.க. வரலாற்றில் இந்த மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

இன்றைக்கு பொருளாளர், மு.க.ஸ்டாலின் எங்கே கழக நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், ஓடோடிச் செல்கிறாரே, அதைப்போலத்தான், ஏன் இதைவிட அதிகமாகத்தான் நான் அப்போதிருந்தேன். எனவே அண்ணா சிலைக்கு மாலை என்றதும், ரதத்திலிருந்து குதித்து, அண்ணா சிலை நோக்கி வேகமாகச் சென்றேன்.

சிலை அருகே நின்று கொண்டு, மிகப்பெரிய மாலை ஒன்றை அண்ணா சிலையின் கழுத்திலே அணிவித்தேன். ஒரு இமைப்பொழுதுதான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை! என் கையை வேகமாக நான் இழுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்த நிலையிலேயே, அவரது சிலையைக் கட்டித் தழுவியபடியே மின்சார "ஷாக்"கிற்குப் பலியாகி, அன்றைக்கே போய்ச் சேர்ந்திருப்பேன்.

ஆம், மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச்சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரமான மாலையை நான் அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான "ஷாக்" அடித்து, என்னை வேகமாக இழுத்த போது, நான் வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டதால் தப்பிப்பிழைத்தேன் என்பதைப் புரிந்துகொண்டேன். அன்பில் போன்றவர்கள் அதிர்ச்சியால் என்னவோ நடந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு வாயடைத்து வருந்தித் தவித்தார்கள்.

அன்று நடைபெற்றது மாவட்ட மாநாடா? மாநில மாநாட்டைப்போல அல்லவா மக்கள் குழுமியிருந்தார்கள். மாநாட்டின் பொருளாளராக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் நாளே மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, மறுநாள் காலையில் அவசரப்படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டார். மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நான் ஆற்றிய நிறைவுரை இன்னமும் என் நினைவில் நிற்கிறது.

அந்த திருச்சியில்தான் தற்போது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி மாதம் 15, 16-ல் மாநாடு. மாநாட்டிற்குப் புறப்பட இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்; இப்போதே பயண ஏற்பாட்டினைத் தொடங்கி விடு. குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதுதானே நமது வழக்கம். திருச்சியில் மாநாடு என்றால் எப்போதும் அது திருப்பு முனை மாநாடு தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+