பிரதமராவது கலந்து கொள்ளாமல் இருப்பது ஓரளவுக்கு ஆறுதல்தான் - கருணாநிதி

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...
கேள்வி: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளாமல், வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று அதிகாரப் பூர்வமாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறதே?
பதில்: நம்முடைய குரலுக்கு மதிப்பளித்து பிரதமராவது அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்கிறாரே என்பதில் ஓரளவுக்கு நமக்கு ஆறுதல் தான்!
கேள்வி: ஒரு துரும்பு கூட இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே நீங்கள் சொல்லியிருந்தீர்களே?
பதில்: ஆமாம், வெளி உறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வதாகக் கூறியிருப்பது விவாதத்திற்குரியது.
கேள்வி: ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளையெல்லாம் ஆளுங்கட்சி மீறுவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்று முதல்வரும் கேட்கிறார்; மாவட்ட ஆட்சித் தலைவரும் கேட்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டு, ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடத்துகிறார்களாம்
கேள்வி: பேரவைத் தலைவராக இருந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயக்குமார் நேற்று கொடுத்துள்ள விளம்பரத்தில் "தமிழ் மண்ணைக் காக்க தெய்வம் அனுப்பி வைத்த தெய்வம்" என்று முதல்வரைப் பாராட்டி இரண்டு பக்கம் விளம்பரம் கொடுத்திருந்ததைப் பார்த்தீர்களா?
பதில்: நீங்கள் சொல்லுகின்ற வாசகங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. தற்போது அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரை யார் அதிகமாக முதலமைச்சரைப் பாராட்டி விளம்பரம் செய்கிறார்களோ அவர்களுக்கும், யார் என்னை அதிகமாகத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுகிறார்களோ அவர்களுக்கும்தான் பதவி என்றாகிவிட்டது!
இந்த ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள் அதிகமாகத் தவறு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் முதலமைச்சர் வீட்டிற்குப் பக்கத்திலே உள்ள நெடுஞ்சாலையில் சென்று பாருங்கள்! அங்கேயுள்ள "ப்ளக்ஸ் போர்டு" ளைப் பாருங்கள்! அதிமுகவின் நாளேடுகளைப் பாருங்கள்! அதிலிருந்தே உண்மையைப் புரிந்து கொள்ளலாம்!
அந்த விளம்பரம் வெளிவந்த நேற்றைய ஏட்டின் மொத்தப் பக்கங்கள் 36. அதில் செய்திகள் வெளிவந்திருப்பது 14 பக்கங்களில்தான்! மீதி 22 பக்கங்களிலும் விளம்பரங்கள்தான்! இந்த அளவிற்கு அவர்கள் விளம்பரம் செய்ய அமைச்சர்களுக்கு தேவையான வருவாய் வந்த வழியைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; சில உண்மைகள் பளிச்செனப் புரியும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications