தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் பிரபாகரன்: கருணாநிதி சிறப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து நமது இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒன் இந்தியா இணையதளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். நேற்று நாம் வெளியிட்ட கருணாநிதியின் சிறப்பு பேட்டியின் முதல் பகுதியில் தேர்தல் கூட்டணிகள், தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்றைய பகுதியில் ஈழத் தமிழர் பிரச்சனை, திமுகவில் அடுத்தது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான கருணாநிதி விரிவான பதிலை அளித்துள்ளார்.

ஒன் இந்தியாவின் கேள்விகளும் கருணாநிதியின் பதில்களும்:

தடுமாறியதே இல்லை..

தடுமாறியதே இல்லை..

கேள்வி: தடுமாற்றமே இல்லாத உங்களது அரசியல் வரலாற்றில் எந்த முடிவுக்காக அதிகம் தடுமாறியிருக்கிறீர்கள்?

கருணாநிதி:
"தடுமாற்றமே இல்லாத எனது அரசியல் வரலாறு" என்று தான் நீங்களே கூறிவிட்டீர்களே, எந்த முடிவுக்காகவும் நான் தடுமாறியதில்லை! முடிவுக்காகத் தடுமாற்றம் என்றால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகி விடாதா?

ஈழப் பிரச்சனைக்காக காங். கூட்டணி முறிவு?

ஈழப் பிரச்சனைக்காக காங். கூட்டணி முறிவு?

கேள்வி: ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியில் இருந்து மீட்டுக் கொள்ளும் வகையில் தான் கூட்டணியை முறித்ததா தி.மு.க.?

கருணாநிதி: அது மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் என்னிடத்திலே அன்பும் பரிவும் நன்றியும் உடையவர்களாக இருந்த போதிலும், தமிழ்நாட்டிலே உள்ள அக்கட்சியின் சில தலைவர்கள், அந்த நிலையில் மாறுபாடு உடையவர்களாக இருந்ததும் ஒரு காரணம்.

தீரமும் திட சித்தமும் மிக்க போராளித் தலைவன்

தீரமும் திட சித்தமும் மிக்க போராளித் தலைவன்

கேள்வி: ஈழத்தில் ஒரு துயரமிக்க போராட்டம் முடிவுற்றதா? இல்லையா? என்றே தெரியாத வினாவோடு அந்தரத்தில் நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஈழத் தமிழர்களுக்கு எது சரியானத் தீர்வாக அமையும் என நினைக்கிறீர்கள்?

கருணாநிதி: ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். அந்த இயக்கத்தையும் இரக்கமற்ற அரக்கர்களான மாபாவிகள் குதறிச் சிதைத்து விட்டார்கள்.

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஈழத் தமிழர்கள் வாழ்வாதாரம் பெற்று, இடர் இல்லாமல் அமைதியோடும், கண்ணியத்தோடும் வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் பயணிக்கப் போகும் பாதையோ, திசையோ தெரியாமல் திகைப்பில் வாழ்கிறார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள், இலங்கையை விட்டே வேறு நாடுகளுக்குச் சென்று வேரூன்றி விட்டார்கள். இங்குள்ள சில தமிழர்களோ, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக "வார்த்தை தர்மம்" வழங்குவதையே மிகப் பெரிய தியாகம் என்றெண்ணிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் சரியான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்வதற்கு ஏதுவாக, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்திட, சர்வதேச சமூகம் உதவியும், ஒத்துழைப்பும் வழங்க முன் வர வேண்டும் என்பதே எமது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

தேர்தல் களத்தை பாதிக்கும்

தேர்தல் களத்தை பாதிக்கும்

கேள்வி: உங்களது அனுபவத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு போதும் தமிழகத் தேர்தல் களத்தில் எந்த ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாதா?

கருணாநிதி: ஈழத் தமிழர் பிரச்சினை வருங்காலத் தமிழகத் தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதுகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையாக உழைப்பவர்கள் யார், உழைப்பவர்களைப் போல நடிப்பவர்கள் யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென்பதே முக்கியம். ஈழத் தமிழர் பிரச்சினையைச் சுயநல நோக்கோடு பயன்படுத்தி வருபவர்களைப் பற்றி உலகத் தமிழர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

அடுத்தது யார்?

அடுத்தது யார்?

கேள்வி: அண்ணாவுக்கு அடுத்தது கருணாநிதி; உங்களுக்குப் பிறகு யார்? சொல்வண்ணத்தில், செயல் வண்ணத்தில்?

கருணாநிதி: இது அடிப்படை ஜனநாயகப் பேரியக்கம் என்பதால், கழகப் பொதுக்குழுவே முடிவு செய்யும்!

கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்..

கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்..

கேள்வி: நீங்கள் தொடாத துறையே இல்லை.... எதில் நீங்கள் சரியாகப் பங்களிக்கவில்லை என்று கருதுகிறீர்கள்? அப்படி ஏதாவது இருக்குமானால்?

கருணாநிதி: எல்லா துறைகளிலுமே, இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்திருக்கலாமோ என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி உள்ளது!

நானே நாயகன்

நானே நாயகன்

கேள்வி: உங்களது வாழ்க்கை சரிதத்தை திரைப்படமாக்குவதாக இருந்தால் உங்களது பாத்திரத்தை யாருக்குக் கொடுக்கலாம்?

கருணாநிதி: எனக்கே கொடுக்கலாமே!

உங்களுக்கு திருப்தியா?

உங்களுக்கு திருப்தியா?

கேள்வி: இத்தனை ஆண்டுக் கால அரசியல், பொது வாழ்க்கையில் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நீங்கள் ஆற்றிய பணிகள் உங்களுக்குத் திருப்தி தந்துள்ளதா?

கருணாநிதி: என்னுடைய திருப்தி பிறகு இருக்கட்டும்; உங்களுக்குத் திருப்தி தந்துள்ளதா?. இத்தனை ஆண்டுக் காலம் ஆற்றிய பணிகள் நிறைவளிப்பதால் தான், தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனது இறுதி மூச்சு இருக்கும்வரை, தமிழுக்கும் - தமிழர்க்குமான எனது தொண்டு தொடரும்!

பிடிக்காத தலைவர்கள் யாரும் இல்லை

பிடிக்காத தலைவர்கள் யாரும் இல்லை

கேள்வி: உங்களைப் பலருக்கும் பிடிக்கும் நல்ல தலைவராக- எதிரிகளையும் ரசிக்கும் தன்மை கொண்டவர் நீங்கள்- உங்களுக்கு எந்தத் தலைவரை மிக மிகப் பிடிக்கும்? அண்ணா, பெரியாரைத் தவிர?

கருணாநிதி: எனக்குப் பிடிக்காத தலைவர்கள் யாரும் இல்லை - ஆனால் என்னைப் பிடிக்காதவர்களையும், என்னைப் பிடிக்கும் அளவுக்கு நான் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்!. அண்ணா, பெரியாரைத் தவிர, எனக்கு மிக மிகப் பிடித்த தலைவர்கள் என்று சொல்ல வேண்டுமேயானால், பெருந்தலைவர் காமராஜரை, மூதறிஞர் ராஜாஜியை, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தை, இந்திரா காந்தி அம்மையாரை, அருமை நண்பர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை., பசும்பொன் தேவர் திருமகனாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசுவை, சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்கை, மனம் கவர்ந்த வாஜ்பாயை, பொதுவுடைமை வீரர் அண்ணன் ஜீவாவை, சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யை என்று இன்னும் சில பெயர்களையும் சேர்த்து மிகப் பெரிய பட்டியலைச் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+