மோடியின் வேட்புமனு மீதான தேர்தல் ஆணைய முடிவு என்ன? கருணாநிதி கேள்வி
சிதம்பரம்: மனைவி இருப்பதை தற்போது ஒப்புக் கொண்டு மோடி தாக்கல் செய்திருக்கும் வேட்புமனு மீது தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து நேற்று அவர் பேசியதாவது:

நரேந்திர மோடி சுத்த சுய பிரகாசம்; அவரிடத்திலே எந்தவிதமான அப்பழுக்கும் இல்லை. அவர் எதையும் மறைக்க மாட்டார். எல்லாவற்றையும் திறந்து வைத்ததைப் போலத்தான் சொல்வார் என்று நேற்று வரையிலே சொன்னார்கள்.
இன்றைக்கு மாலை பத்திரிகையிலே பார்த்தால், அவருக்கு ஒரு துணைவியார் இருக்கிறார் என்ற செய்தியைக் கூட நரேந்திர மோடி நாட்டிற்குச் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறார். நான் தேர்தலுக்காக விண்ணப்பித்த விண்ணப்ப மனுவில் அதைக் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமல் விட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
நாமினேஷன்' பேப்பரில் தேர்தலுக்காக செய்கின்ற விண்ணப்பத்தில் குடும்பத்தாருடைய பெயரை எல்லாம் சொல்ல வேண்டியதுதான் அவசியம். நான் அப்படி செய்யத் தவறினால் மனைவியினுடைய பெயரையோ, மகளுடைய பெயரையோ குறிப்பிடத் தவறினால், அது தேர்தல் கமிஷன் - தேர்தல் ஆணையத்தின்படி குற்றம். அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இதுவரையிலே காணப்படவில்லை.
ஆனால், நரேந்திரமோடி தனக்கு திருமணமானதை இதுவரையில் சொல்லாமல் மறைத்தார் என்றால், இவர் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை சிதம்பரம் பொதுக்கூட்டத்திலே நான் இதை வெளியிட்ட பிறகு நாளைய தினம் அதை அவர்கள் சொல்லலாம். எனக்கு ஒரு மனைவி இருப்பது உண்மைதான். அதை நான் மறந்து போய் விட்டுவிட்டேன் என்று சொன்னால், மனைவியையே மறந்து விட்டாரா என்று கேலிச் சிரிப்பு எழும்.
எப்படி இந்தத் தேர்தலிலே அவர் போட்டியிடப்போகிறார் என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய விவகாரம். எனவே நான் அதை தேர்தல் ஆணையத்திற்கு விட்டுவிடுகிறேன் அவர்கள் முடிவு செய்யட்டும்; எப்படி முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
இந்த பிரச்சினையை கிளப்பிய கருணாநிதி சாதாரண ஆளல்ல, ஏதோ நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டவேண்டும் என்பதற்காக இந்த குற்றத்தைச் சொல்லவில்லை; உலகத்திற்கு, இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு ரகசிய செய்தியைச் சொன்னேன் அவ்வளவுதான். எப்படி இவர் மனைவி இருப்பதைக் கூடச் சொல்லாமல்; அவருடைய பெயரால் இவ்வளவு சொத்து இருக்கிறது என்பதைக் கூட சொல்லாமல், அதை பரம ரகசியமாக வைத்திருக்கிறார் என்றால் நாளைக்கு இந்த நாட்டு மக்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா?
அப்படி பதில் சொல்லுகின்ற நேரத்திலே அந்த பதிலை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாதா என்பதை விரைவிலே தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை அறிவிக்காவிட்டால் மனைவி இருந்தபோது அதை மறைக்கின்ற நம்முடைய நரேந்திர மோடி அவர்கள், நாளைக்கு இன்னும் எதை மறைக்க மாட்டார்? என்றெல்லாம் கேள்வி எழுந்தால் நாடு என்ன ஆகும்?
நாட்டிலே ஆட்சி எப்படி நடைபெறும்? என்பதை தயவு செய்து இதுவரையிலே நரேந்திர மோடி பற்றி அவர் நல்லவர், வல்லவர் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சிந்தித்துப் பார்த்ததற்குப் பிறகு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications