கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விட்டதாக ஜெயலலிதா கருதுகிறார்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi questions Jayalalitha on fishermen issue
சென்னை: மீனவர்கள் பிரச்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தன் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதலமைச்சர் ஜெயலலிதா 7.1.2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார்.

ஏற்கனவே, மீனவர் பிரச்னைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்த செய்தியை அறிந்த நான், உடனடியாக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை நாகைக்கு அனுப்பி, அவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் செய்ததோடு, மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் 27.12.2013 அன்றும், 28.12.2013 அன்றும் சந்திக்கச் செய்தேன்.

அப்போது பிரதமர், 2013 டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வாக்கில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், அந்தக் கூட்டம் நடைபெற்றால் பிரச்னை தீர்ந்து விடும் என்றும் உறுதியளித்தார். மேலும் மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இரு நாட்டு மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான தேதியை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டுமென்றும், பேச்சுக்குப் பின் பரஸ்பரம் இரு நாட்டு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியும், வாசனும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்திய -இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடை பெறுவதற்கான தேதியை இறுதி செய்யும் விவகாரத்தில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என்று அ.தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

16.3.2013லிருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீனவர் பிரச்னை குறித்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 11 கடிதங்கள் எழுதியிருக்கிறார். இந்திய மீனவர் பிரதிநிதிகளும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளும் சந்தித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஒத்துழைத்திட வேண்டும் என்று, தான் எழுதிய பெரும்பாலான கடிதங்களில் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.

இரு தரப்பினரும் கலந்து பேசும் கூட்டம் ஒன்றை நடத்துவது, இரு நாட்டு மீனவர்களின் சமூகப் பொருளாதார நல்வாழ்வுக்கும் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் உரிய தீர்வு காண்பதற்கு அடிப்படையாக அமைந்திடும் என்று பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேசுவது தொடர்பாக சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா எண்ணிப்பார்த்தார். 9.11.2013 அன்று இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில், "இரு நாட்டு மீனவர்களும் 2013 டிசம்பர் மாதத்தில் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு தாங்கள் 20.9.2013 அன்று அனுப்பிய கடிதத்தின் மூலம் அளித்திருக்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா தன்னுடைய கடிதத்தின் மூலம் இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்தபடி, 2013 டிசம்பர் மாதத்தில், இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறவே இல்லை. தமிழக அரசு அந்தக் கூட்டத்தை நடத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும், அதில் தமிழக அரசும் பங்கெடுத்துக் கொள்வது பற்றியும் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இரு நாட்டு மீனவர்களையும் இணைத்து கூட்டம் நடத்துவதாக ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை. மீனவர்கள் தொடர்ந்து துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்று தமிழக மீனவர் பிரச்னையில் ஜெயலலிதா எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தி இருக்கிறார் என்பதை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி சுட்டிக் காட்டியிருக்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, இதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், தமிழக மீனவர்களின் முக்கியமான இந்தப் பிரச்னையில் மத்திய அரசு மட்டும் அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதைப் போல, மற்றவர் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+