''உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே.. தேர்தல் கமிஷனுக்கும் பெப்பே தானா?''

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறைக்கு அடிப்படையான சட்டங்களுக்கும், தான் மேலானவர் என்று கற்பனை செய்து கொண்டு, அனைத்து வகையான விதி மீறல்களையும் செய்து, நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத் தின் கண்டனங்களுக்கும் தொடர்ந்து ஆளாகி வரும் ஜெயலலிதா, மனச்சாட்சியை மதிப்பாரா? எச்சரிக்கைகளை ஏற்று நடந்து கொள்வாரா? இதுவே இன்று நாட்டு மக்களின் இதயத்தில் எழும் கேள்வி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் அவர் திமுகவினருக்கு எழுதியுள்ள உடன் பிறப்பே கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கை...

முதல்வர் யார்? எப்படிப்பட்டவர்?

முதல்வர் யார்? எப்படிப்பட்டவர்?

ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் 4ஆம் தேதி நடந்ததையொட்டி அ.தி.மு.க. சார்பில் 31 அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னணி யினர் என்று 61 பேரைக் கொண்ட "மெகா" தேர்தல் பணிக் குழு ஒன்றை நியமித்து, அத்தனை அமைச்சர்களும் அங்கே முகாமிட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது பற்றியும், முதலமைச்சரே கடந்த 28ஆம் தேதியன்று விமானத்திலும், கெலிகாப்டரிலுமாக பயணம் செய்து ஒரே நாளில் 9 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதைப் பற்றியும் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன.

என்னென்ன திட்டங்கள்

என்னென்ன திட்டங்கள்

அப்போது முதல்வர் அந்த ஒரு தொகுதியில் மட்டும் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவதாகச் செய்த அறிவிப்புகளையும் அனைத்து நாளேடுகளும் விரிவாக வெளியிட்டிருந்தன. ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் செய்த அறிவிப்புகளைப் பற்றி நான் 29ஆம் தேதியன்றே சுட்டிக்காட்டி, 30ஆம் தேதிய முரசொலியில் வெளிவந்த "உடன்பிறப்பு" மடலில், கடந்த காலத்தில் அதிமுக எவ்வாறு இடைத் தேர்தல்களைச் சந்தித்தது என்பது பற்றியும், முதல்வர் ஏற்காடு தொகுதியில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினார் என்பது பற்றியும் விளக்கியிருந்தேன்

என்னுடைய அறிவுரையின்படி

என்னுடைய அறிவுரையின்படி

மேலும் 29ஆம் தேதியன்றே, என்னுடைய அறிவுரையின்படி, கழக அமைப்புச் செயலாளர் தம்பிகள் டி.கே.எஸ். இளங்கோவனும், தலைமைக் கழக வழக்கறிஞர் பரந்தாமனும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், ஐ.ஏ.எஸ்., அவர்களிடம் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் பற்றியும், அங்கே நடைபெற்ற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் பற்றியும் புகார் அளித்தனர்.

சிடிகளை ஆராய்ந்ததில்

சிடிகளை ஆராய்ந்ததில்

இது தொடர்பாக ஜெயலலிதா கூட்டத்துப் பட்டியில் பேசிய பேச்சுக்களின் சி.டி. பதிவுகளை ஆய்வு செய்ததில், முதலமைச்சர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகள் அளித்துப் பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜெயலலிதா மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளதால், அதுபற்றி 3-12-2013 மாலை 5 மணிக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலில், தான் எந்த வாக்குறுதியோ அல்லது அறிவிப்போ 28ஆம் தேதி ஆற்றிய எந்த உரையிலும் வெளியிடவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை வன்மையாக மறுப்பதாகவும் எழுதியிருந்தார்.

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றலாமா...

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றலாமா...

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு அளித்த விளக்கத்தை, அனைத்து நாளேடுகளுக்கும் கொடுத்து அதுவும் ஏடுகளில் வெளிவந்தது. முதல்வரின் அந்த விளக்கத்திற்குக்கூட, "தேர்தல் ஆணையத்தை முதல்வர் ஏமாற்றலாமா?" என்ற தலைப்பில் நான் "கேள்வி-பதில்" பகுதியில் விளக்கியபோது, அவர் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன? எந்தெந்த ஏடுகளில் எவ்வாறு அது வெளியிடப்பட்டிருந்தது என்ற விவரங்களையெல்லாம் தொகுத்து வெளியிட்டதோடு, தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் பதவியிலே இருப்பவர்கள் உண்மைக்கு மாறான தகவலை இவ்வாறு எழுத்து மூலமாகத் தெரிவிப்பதே பெரிய தவறாகும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

தேர்தல் ஆணையத்தின் நிராகரிப்பும், அறிவுரையும்

தேர்தல் ஆணையத்தின் நிராகரிப்பும், அறிவுரையும்

முதல்வர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த விளக்கம் பற்றித்தான், மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று (6-12-2013) உத்தரவு பிறப்பித் திருக்கிறது. அந்த உத்தரவில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் உள்ள அமைச்சர்களோ, அதிகாரிகளோ நிதியுதவி தொடர்பான எவ்வித வாக்குறுதியையும் வாக்காளர்களுக்கு அளிக்கக்கூடாது; சாலை, குடிநீர் வசதி போன்ற வாக்காளர்களை ஈர்க்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்பது தொடர்பான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கால கட்டத்திலும் கூறிவருகிறது.

சம வாய்ப்பு

சம வாய்ப்பு

தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியிட சமமான வாய்ப்பையும், சூழலையும் உருவாக்கித் தர வேண்டும். தேர்தலின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அந்த அடிப்படையில், அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தை விதிகளை முழு மனதுடன் பின்பற்ற வேண்டும். எனவே, விதிகளை மீறியதாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு நீங்கள் அனுப்பிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருந்து, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது" என்று தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு எச்சரிகை விடுத்துள்ளது.

இதை விட என்ன சான்றிதழ் தர முடியும்...

இதை விட என்ன சான்றிதழ் தர முடியும்...

இதைவிட ஒரு முதல்வக்குத் தேர்தல் ஆணையம் எவ்வாறு "சான்றிதழ்" கொடுக்க முடியும்? ஜெயலலிதாவுக்கு இதுதான் முதல் சான்றிதழா? 2003ஆம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, அங்கே பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்றும், பாலிடெக்னிக் தொடங்கப்படும் என்றும் பேசினார். இதுபற்றி ஏராளமான புகார்கள் கூறப்பட்ட நேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம், முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்குமாறு கோரிப் பெற்றது. அதன் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையம், இப்போது போலவே, ஒரு கண்டனக் கடிதம் அனுப்பியது.

ஆதாயம் தேடக் கூடாது

ஆதாயம் தேடக் கூடாது

அதில் தலைமைச் செயலாளரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளுங்கட்சி அரசு சார்பிலான முன்னறிவிப்புகளைச் செய்து ஆதாயம் தேடக் கூடாது என்று தேர்தல் விதி உள்ளது என்றும், ஆட்சி கையில் இருக்கிறது என்பதற்காக ஆளுங் கட்சி எவ்விதச் சலுகை களையும் பெற முடியாது என்றும் குறிப்பிட் டிருந்தது.

வருத்தம்

வருத்தம்

மேலும் அந்தக் கடிதத்தில், "தமிழக முதல்வர் சாத்தான்குளம் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது சம்பந்தமான அவரது செயல்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வர் தனது பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகத்தான் என்று தேர்தல் கமிஷன் உறுதியாக கருதுகிறது. ஜெயலலிதாவின் பிரச்சார முறை ஏற்கத்தக்கதல்ல என்று நிராகரிக்கிறோம். அவர் உறுதிமொழிகளை அளித்தது, தேர்தல் விதிகளை மீறிய குற்றமே என்று தேர்தல் கமிஷன் முடிவுக்கு வருகிறது'' என்று ஜெயலலிதாவுக்கு அப்போது கடிதம் எழுதியது.

கண்டனத்தோடு நிறுத்திக் கொண்டது

கண்டனத்தோடு நிறுத்திக் கொண்டது

ஆனால் துரதிருஷ்டவசமாக, கடிதத்தோடு தேர்தல் ஆணையம் தனது கண்டனத்தை அப்போதும் நிறுத்திக் கொண்டது. அதை அலட்சியப் படுத்தி நடந்து கொண்ட ஜெயலலிதாவுக்கு இப்போதும் எதிர்காலத்தில் எச்சரிக்கையோடு இருக்குமாறு கூறியுள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொண்டது இந்த நிகழ்ச்சிகளில் மட்டும்தானா?

2001ல் இப்படித்தான்...

2001ல் இப்படித்தான்...

2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடை பெற்றதே அப்போது இதே முதல்வர் ஜெயலலிதா என்ன செய்தார்? ஒரு வேட்பாளர், இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த அடிப்படையான விதி முறை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா அந்தத் தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டார். அந்த நேரத்தில் டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு இரண்டாண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை நீதிபதியால் விதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவு கூறுகிறது.

நன்றாக அறிந்திருந்தும்

நன்றாக அறிந்திருந்தும்

இந்த விதிமுறையை முதல்வர் நன்றாக அறிந்திருந்தும், அந்தத் தேர்தலில் வேண்டுமென்றே நான்கு இடங்களிலே போட்டியிட்டார்.அதுமாத்திரமல்ல; அவரது வேட்பு மனுவிலே "இரண்டு இடங்களுக்கு மேல் போட்டியிடவில்லை" என்று ஒரு முதல்வர் உண்மைக்கு மாறான தகவலையும் தேர்தல் அதிகாரிக்குத் தந்தார். இதன் காரணமாக அவருடைய வேட்பு மனுக்கள் நான்கு இடங் களிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு தனது வேட்பு மனுவினை தள்ளுபடி செய்யும் நிலையை அவரே திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களில் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு தி.மு.கழகம்தான் காரணம் என்றும், அவரை தேர்தலில் நிற்க விடாமல் தி.மு.க. செய்து விட்டது என்றும் திசை திருப்பும் பிரச்சாரம் செய்து பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற்றார்.

அவசரம் அவசரமாக

அவசரம் அவசரமாக

2001ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும்போதே, அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தலில் போட்டியிடாத, நீதிமன்றத்தினால் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, தன்னை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நாளேடுகள் எல்லாம் அதனை வெகுவாகக் கண்டித்தன. பின்னர் இந்தப் பிரச்சினையும் நீதிமன்றம் வரை சென்று, முதல்வராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு கூறப்பட்டு, இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்.

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு

இதுவும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த "சான்றிதழ்""தான்! தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினரை பதவி விலகச் செய்து, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலில் நிற்க முடிவெடுத்தபோது, அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல விலை உயர்வுகளையெல்லாம் ரத்து செய்திடச் செய்தார். குறிப்பாக பேருந்து கட்டணத்தைக் குறைத்தார்; அரிசி விலை உயர்வு ரத்து செய்யப்பட்டது. ஆண்டிப் பட்டியில் நடைபெற்ற அந்த இடைத் தேர்தலில் அராஜகம் கொடி கட்டிப் பறந்தது.

பெருமளவில் முறைகேடுகள்...

பெருமளவில் முறைகேடுகள்...

தேர்தல் அதிகாரியே அந்தத் தொகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு தாக்கல் செய்த அறிக்கையில், "Mr. Rao returned to the Capital and in his report submitted to the Commission observed that large scale rigging and malpractices had been done in the revision of the rolls" என்று கூறியிருந்தார். ஆண்டிப்பட்டியில் மட்டுமல்லாமல், அப்போது இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலும் முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெற்றதால், இரண்டு இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையமே ஒத்திவைத்தது. இதுவும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கிடைத்த "புகழ்" தான்!

மனசாட்சியை மதிப்பாரா..

மனசாட்சியை மதிப்பாரா..

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறைக்கு அடிப்படையான சட்டங்களுக்கும், தான் மேலானவர் என்று கற்பனை செய்து கொண்டு, அனைத்து வகையான விதி மீறல்களையும் செய்து, நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத் தின் கண்டனங்களுக்கும் தொடர்ந்து ஆளாகி வரும் ஜெயலலிதா, "மனச்சாட்சியை" மதிப்பாரா? "எச்சரிக்கைகளை" ஏற்று நடந்து கொள்வாரா? இதுவே இன்று நாட்டு மக்களின் இதயத்தில் எழும் கேள்வி!

தேர்தல் கமிஷனுக்கும் பெப்பேதானா..

தேர்தல் கமிஷனுக்கும் பெப்பேதானா..

"உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே" என்பது கிராமிய பழமொழி; முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் "தேர்தல் கமிஷனுக்கும் பெப்பே தானா?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+