மூத்த அமைச்சர்களிடம் இருந்து ரூ30,000 கோடி பணம், சொத்துகள் பறிமுதல்
கிழக்குக் கடற்கரைச் சாலையில் "அமரேந்திரா" எனும் அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி வரும் "காஸா கிராண்ட்" நிறுவனம், நியூயார்க் நகரில் விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான "ஓக்லி பிராப்பர்ட்டி சர்விசஸ்" - ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் செய்திருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பற்றி ஊரெங்கும் பேசப்படுகிறது.
தற்போது மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் சிலர் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் அமைச்சர்களாக இருந்து கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடுகள் - ஊழல் மூலம் சேர்த்த பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்ப் பணம் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்து சொந்தக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதற்கு எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?
மிகப் பெரிய பொருளாதாரக் குற்றங்களைப் புரிந்திருக்கும் அமைச்சர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லையே, ஏன்? கடுங் கிரிமினல் குற்றவாளிகளான அவர்களைக் கைது செய்யாதது ஏன்?
விரிவான விரைவான விசாரணைக் குட்படுத்திச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையைத் தொடங்காதது ஏன்?
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்னும் போது, அமைச்சர்கள் அதற்கு விதி விலக்கா? அமைச்சரவை யிலிருந்து உடனடியாக நீக்காமல் நேரில் அழைத்து ரகசிய விசாரணையும், பேரமும் நடத்தி, ஓரங்கட்டி ஒதுக்கி வைத்து விட்டால் மட்டும் போதுமா? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நாட்டு மக்களுக்கு விளக்கமளித்திட வேண்டும் என்ற கடமையைத் தட்டிக் கழித்து, முதலமைச்சர் ஜெயலலிதா அல்லது அ.தி.மு.க. அரசு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பகல் கொள்ளைகள் பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே ஏடுகளிலும், அறிக்கைகளிலும் வருகின்ற செய்திகள் எல்லாம் உண்மை என்றே மக்கள் நம்புகிறார்கள். ஒருவேளை அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மேல் இடத்துக்கு கட்டிய கப்பத்தைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு விடுவார்களோ என்ற பயம் காரணமாக அனைத்தும் மறைக்கப்படுகிறதா?
குற்றச் செயல்களையெல்லாம் மறைத்திடவும், கவனத்தைத் திசை திருப்பிடவும், முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் பணம் கட்டிய அத்தனை பேரையும் அழைத்து "நேர் காணல்" நடத்தாமல், ஏதோ பெயருக்கு ஒரு சிலரை மட்டும் தன் வீட்டிற்கே அழைத்து நாட்டு மக்களையும், ஏன் அவருடைய கட்சிக்காரர்களையும் ஏமாற்றும் நாடகத்தை நடத்துவதோடு; ஆளும் அ.தி.மு.க.வுக்கெதிராக நாள்தோறும் பல்கிப் பெருகித் திரண்டு வரும் வாக்குகளைச் சிதறிடச் செய்ய, மலையெனக் குவித்து வைத்திருக்கும் பணத்தையும், ஒருசில பத்திரிகையாளர்களையும், உளவுத் துறையினரையும் பயன்படுத்தி தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் ஏவி வருகிறார்.
இத்தகைய சூது, சொற்ப சுகத்தைத் தரலாம்; ஆனால் "சூதும் வாதும் வேதனையில் முடியும்!" வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது!''












Click it and Unblock the Notifications