பெருமை சேர்த்த பிறகுதான் ஓய்வு பெற்றுள்ளார் சச்சின்- கருணாநிதி வாழ்த்து
சென்னை: கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி, யாரும் நினைவில் வைக்கத்தக்க சாதனைகளைப் படைத்து, இந்தியாவில் யாரும் செய்ய முடியாத வகையில் பெருமை சேர்த்த பிறகுதான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ஓய்வைத் தொடர்ந்து கருணாநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர்,

கிரிக்கெட்டில் மிகவும் அபாரமாக விளையாடி நினைவில் வைக்கத்தக்க சாதனைகளை படைத்து, இந்தியாவில் யாரும் செய்ய முடியாத வகையில் பெருமை சேர்த்த பிறகுதான் நீங்கள் ஓய்வு பெற்றுள்ளீர்கள்.
உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டீர்கள். இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். முறியடிக்க முடியாத மற்றும் மறக்க இயலாத சாதனைகள் மூலம் நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மகுடம் சூட்டியுள்ளீர்கள்.
கிரிக்கெட்டில் தனது திறமையை முழுவதையும் வெளிப்படுத்தியவர் என்று கவாஸ்கர் உங்களை சரியான முறையில் விவரித்துள்ளார்.
கிரிக்கெட்டின் அனைத்து நிலையிலும் சச்சின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்றும், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் இந்த தலைமுறையின் சிறந்த வீரர் என்றும் உங்களை அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
புகழின் உச்சத்தை அடைந்த பிறகு பிரியா விடை பெற்றீர்கள். பிரிவுபச்சாரத்தில் உங்களது கண்ணீர் உரை நெகிழ வைத்தது. உங்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.
நீங்கள் நீண்ட காலம், உடல் ஆரோக்கியத்துடனும் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications