'தமிழ்ப் பெருமகனார்' தமிழண்ணல் மறைவுக்கு கருணாநிதி, ராமதாஸ், வைகோ இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்ப் பெருமகனார்" தமிழண்ணல் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ஆகியோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழண்னல் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சீரிய தமிழறிஞர் தமிழண்ணல், மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகவும், பின்னர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மறைந்த செய்தியினை ஏடுகளில் படித்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

 Karunanidi, Ramadoss, Vaiko condoles Thamizhannal

நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலின் முதல் பதிப்பினை தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் தான் வெளியிட்டார். அப்போது அவர் ஆற்றிய அரிய உரை இன்னமும் என் நினைவிலே உள்ளது.

தொல்காப்பியம் 2-ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியர் தமிழண்ணல்தான் தலைமை தாங்கினார். தமிழறிஞருக்கான மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர் தமிழண்ணல்.

அவரது மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டை பாதுகாப்பதில்...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

முதுபெரும் தமிழறிஞரும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை தலைவராக இருந்தவருமான தமிழண்ணல் உடல்நலக் குறைவால் மதுரையில் நேற்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்கும் பாடுபட்டவர்களில் தமிழண்ணல் மிகவும் முக்கியமானவர். தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 25.04.1998 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமது தலைமையில் 101 தமிழறிஞர்களை திரட்டி சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தியவர். எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பதில் உறுதியாக இருந்தவர்.

தமிழ் ஆராய்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழை வளர்ப்பதற்காக தலைசிறந்த தமிழறிஞர்களை உருவாக்கியவர்.

அவர் எனக்கு நெருங்கிய நண்பராகவும், நான் மதிக்கும் தமிழறிஞராகவும் விளங்கியவர். தமிழ் ஓசை நாளிதழையும், மக்கள் தொலைக்காட்சியையும் தொடங்கி நடத்துவதற்கு ஊக்கமளித்தவர். சென்னையில் நடைபெற்ற தமிழ் ஓசை நாளிதழின் 2-ம் ஆண்டு விழாவிலும், மதுரையில் நடைபெற்ற மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவிலும் பங்கேற்று தமிழ் வளர்க்கும் இந்த ஊடகங்கள் வளர வேண்டும் என்று வாழ்த்தியவர்.

அவரது மறைவு தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

தமிழறிஞர் தமிழண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச் சான்றோர் பேரவை உருவாக்கிய தமிழண்ணல்- வைகோ

வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்:

தமிழ் மரபையும் பண்பாடுகளையும் பேணிக் காத்து வருகின்ற செட்டிநாட்டில் பிறந்து, வ.சுப. மாணிக்கனார் போன்ற அறிஞர் பெருமக்களிடம் பயின்று, தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், நேற்று மறைந்துள்ளார்.

‘தமிழ்ச் சான்றோர் பேரவை' போன்ற அமைப்புகளை உருவாக்கி, தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேணிட வேண்டும் எனக் காலமெல்லாம் போராடியவர்.

திரு வி.க. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,செம்மொழி விருது போன்ற தகுதியான விருதுகளை மிகுதியாகப் பெற்றவர்.

சங்கம் வளர்த்த மதுரையில் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, ஒப்பற்ற பணிகளை ஆற்றியவர்.

வாழையடி வாழையென வளரும் தமிழ் அறிஞர் பெருமக்களைத் தம் வழிமரபில் உருவாக்கிய பெருமகனார். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் எழுதியவர். கட்டுரை இலக்கியம், கவிதை, சிறுகதை என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

‘மெல்லத் தமிழ் இனி வெல்லும்' என்று சொல்லும் வகையில், மரபுத் தமிழ் சார்ந்த ஆய்வுகளையும், புதுப்புதுக் கோணங்களில் கருத்து அரங்குகளையும் வழிநடத்தியவர். அப்பெருமகனாருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கின்றேன். பலமுறை சந்தித்து உரையாடி, அரியக் கருத்துகளை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

தமிழ் உள்ளவரையில் வாழும் ஒப்பற்ற தமிழ் அறிஞர் தமிழ் அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மாணாக்கர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+