8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- 5 ஆண்டு சிறைதண்டனை விதித்த கரூர் கோர்ட்!
கரூர்: கரூரில் எட்டு வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்த செல்வநாதன் மகன் செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தனது பக்கத்துவீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமியை தூக்கிச் சென்று புதர்மறைவில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் அங்கே திரண்டதால், செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.குணசேகரன் குற்றவாளி செந்தில்குமாருக்கு குழந்தையை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் மூன்று மாத சிறையும், பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஐந்து ஆண்டு சிறையும், ரூபாய் 1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறையும், இந்த தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செந்தில்குமார் திருச்சி நடுவன் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications