ரயில்வே துறையில் கிடுகிடு வளர்ச்சியில் கேரளா.. அதல பாதாளத்தில் கிடக்கும் தமிழகம்!
நாகர்கோவில்: கடந்த இருபது வருடங்களாக ரயிவே வளர்ச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது கேரளா. ஆனால் கேரளாவை விட பெரிய மாநிலமான தமிழகமோ, 20 வருடம் பின் தங்கிக் கிடக்கிறது. ஏன் இந்த அவலம்.. கேரளத்தை விட பலம் வாய்ந்த எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் இருந்தும் ஏன் இந்த பின்னடைவு.. கேரளா மட்டும் ரயில்வேயில் ஜொலிக்கும் ரகசியத்தை தமிழக அரசும் தமிழக எம்.பிக்கள் பின்பற்றுவார்களா? என்ற ஏக்கம் கிளம்பியுள்ளது.
என்னதான் தமிழ்நாடு பெரிய மாநிலம் என்று சொல்லிக் கொண்டாலும், தமிழகத்தைச் சேர்ந்த மத்தியில் பெரிய பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், தம்மாத்தூண்டு கேரளா, பல விஷயங்களில் நம்மை பின்னுக்குத் தள்ளி விட்டு எங்கேயோ போய் விட்டது.
குறிப்பாக ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால் குட்டி மாநிலமான கேரளாவில் உள்ள ரயில்வே வசதிகளை ஒப்பிட்டால் தமிழகம் மிக மிக பின்தங்கியே உள்ளது. ஏன் இந்த நிலைமை.

தமிழகத்தில் நான்கு கோட்டங்கள்
சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் நான்கு உள்ளன. கேரளாவில் 2 கோட்டங்கள் உள்ளன.

5 மாநிலங்களை உள்ளடக்கியது
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில்வழி தடங்களை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டது தெற்கு ரயில்வே மண்டலம் ஆகும்.

கேரளாவுக்கு மட்டும் குவியும் நிதி
3.34 கோடி மக்கள் தொகையும் 38,863 சதுர கி.மீ மொத்த பரப்பளவும் 1050 கி.மீ ரயில் இருப்புபாதை ரயில் வழி தடமும் இரண்டு ரயில்வே கோட்டங்கள் கொண்ட கேரளாவுக்கு ஓவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கணிசமான அளவுக்கு ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை கடந்த இருபது ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

நீட்டிப்பு என்ற பெயரில் பறிபோன தமிழக ரயில்கள்
இது மட்டும் இல்லாமல் கணிசமான அளவு தமிழக ரயில்களை நீட்டிப்பு என்ற பெயரில் கேரளாவில் உள்ள பகுதிகளுக்கு நீட்டிப்பது கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்தும் வருகிறது.

போராடி பெறும் எம்.பிக்கள்
கேரளாவில் உள்ள எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி கேரளாவுக்கு என தனி ரயில்களைப் பெற்று விடுகின்றனர். இதன் மூலம் கேரளத்தவர், தங்களது மாநில ரயில்வேதுறை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது புலனாகும்.

தமிழக எம்.பிக்களால் பிரயோஜனமே இல்லை
ஆனால் கேரளாவைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் மூன்று மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்திலோ அப்படிப்பட்ட போர்க்குணம் மிக்க எம்.பிக்களைக் காண முடியவில்லை.

மிக மிக பின்தங்கியுள்ள தமிழகம்
கேரளாவில் உள்ள ரயில்களின் அறிவிப்பையும் திட்டத்தையும் ஒப்பிடும் போது தமிழகம் எந்த அளவு ரயில்வே துறையில் பின்தங்கி உள்ளது என்பது புரியும். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்படும் ரயில்கள் சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு பல்வேறு ரயில்கள் அறிவிக்கபட்டு இயக்கப்பட்டு வருகிறது.

60 கிலோ மீட்டர் தூரத்திற்குத்தான்
சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக இயக்கப்படும் ரயில்கள் வெறும் 60கி.மீ தூரம் மட்டுமே தமிழக எல்லையில் பயணிக்கிறது. சென்னைக்கு ரயில்களை இயக்கிவிட்டு தமிழகத்துக்கு இவ்வளவு ரயில்கள் இயக்கபட்டுள்ளது என கணக்கு காட்டப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்டால் தமிழக எல்லைக்குள் அடுத்து எந்த ஒரு நிறுத்தமும் இருக்காது.

ஆனால் கேரளாவில் அப்படியில்லை
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து ஓர் ரயில் அறிவிக்கப்ட்டால் அந்த ரயில் கேரளாவில் உள்ள அனைத்து பகுதிப் பயணிகளுக்கும் பயன்படும் விதமாக இயக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்திலோ....
கேரளாவில் உள்ளதை போன்று தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்கினால் தமிழக மாநில எல்லைக்குள் அதிக தூரம் பயணிக்கும் ரயிலாக இருக்கும். இவ்வாறு அறிவித்து இயக்கினால் மட்டுமே இது போன்ற ரயில்களால் தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சென்னைக்கு வந்தால்தான் உண்டு
மேலும், தென்தமிழ்நாட்டு பகுதிகளிலிருந்து வட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நேரடியாக ரயில் வசதி தற்போது இல்லை. தென்தமிழ்நாட்டுப் பயணிகள் வட இந்தியாவுக்குச் செல்வதாக இருந்தால், சென்னை வந்துதான் ரயில் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அலைச்சல், பண விரையம், லக்கேஜ்களைத் தூக்கிச் செல்லும் சிரமம், தங்குமிடச் செலவு என பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

அரசியல் காரணங்களால்
தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் மற்றம் புதிய ரயில் திட்டங்களில் ஒரு ஊரை குறிவைத்து மட்டும் அதிக ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அரசியல் காரணங்களுக்காகவே இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. ஒரு சில ஊர்களுக்கு அந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகளில் நிர்ப்பந்தம் அல்லது நெருக்கடி காரணமாக அறிவிக்கப்படுகிறது.

குறுகிய மனப்பான்மை
இந்த அரசியல்வாதிகள் குறுகிய மனபான்மை காரணமாக அவர்களது ஊருக்கு மட்டுமே ரயில் விட்டால் போதும் என்று நினைப்பதாலும், தான் மட்டும் அடுத்த தேர்தலில் ஜெயித்தால் போதும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்.

ஒற்றுமை உணர்வுடன் இணைந்து செயல்பட்டால்...
அப்படி இல்லாமல், கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளைப் போல, ஒற்றுமை உணர்வுடன், மாநில நலன் கருதி, இணைந்து செயல்பட்டால்தான், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு நெருக்கடி கொடுத்தால்தான் அதிக ரயில்களையும், பலன்களையும் தமிழ்நாடு பெற முடியும்.

கேரளாவில் மின்சாரப் பாதை அதிகம்
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசரகோடு வரை உள்ள ரயில் பாதைகளில் சுமார் 80 சதவிகிதம் இருவழி பாதையாகவும் மின்சாரப் பாதையாகவும் மாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள ரயில் பாதைகளும் பணிகள் விரைவாக நடைபெற்று பணிகள் 2015க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிதியை அங்குள்ள எம்.பிக்ள் பெற்று விட்டனர்.

தமிழகத்தின் நிலையைப் பாருங்கள்
ஆனால் தமிழகத்தில், கன்னியாகுமரி - சென்னை பாதையை இருவழிபாதையாக மாற்றும் திட்டத்தில் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. மீதமுள்ள 80 சதவீத பாதை ஒருவழி பாதையாகவே உள்ளது. இதிலும் கன்னியாகுமரி - மதுரை 240 கி.மீ தூரம் அனுமதிக்கப்படாத திட்டம் ஆகும். இந்த திட்டங்கள் அனைத்தும் 2025-ம் ஆண்டிலாவது நிறைவு பெறுமா என்பது சந்தேகமே.

அடுத்த 50 ஆண்டுகளுக்குக் குறி வைக்கும் கேரளா
கேரளாவில் உள்ள எம்.பிக்கள் திருவனந்தபுரத்திலிருந்து அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு கேரளத்துக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்ற தொலைதூர கண்னோட்டத்துடன் திருவனந்தபுரத்தின் அருகில் உள்ள நேமம் ரயில் நலையத்தில் 250 கோடி மதிப்பீட்டில் பத்து பிட்லைன்கள் வசதியுடன் கூடிய புதிய ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுத்து 2012-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியது.

தமிழகமோ ராயபுரத்தில் விழுந்து கிடக்கிறது
ஆனால் தமிழக எம்.பிக்களோ, சென்னையிலிருந்து அதிக ரயில்களை வடஇந்திய நகரங்களுக்கு இயக்கும் நோக்குடன் ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால், தமிழகத்தின் தென் கோடியில் உள்ள ரயில் நிலையமான கன்னியாகுமரி ரயில் நிலையத்தை ரயில் முனைய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

குமரியிலிருந்து தொடங்க வேண்டும்
இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மதுரை, திருச்சி, சென்னை வழியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக பத்து பிட்லைன்களும் சுமார் பத்து முதல் இருபது வரை காலி ரயில்பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள், கூடுதல் நடைமேடைகள் போர்கால நடவடிக்கையாக அமைக்க வேண்டும். இந்த வசதிகள் அமைத்தால் மட்டுமே தமிழக பயணிகள் பயன்படும்படியாக கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

இணைப்புப் பெட்டி தொழிற்சாலை
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் புதிய இணைப்புப் பெட்டி தொழிற்சாலை அமைக்க அங்கு உள்ள அனைத்து எம்.பிக்கள் அனைவரும் இணைந்து போராடி வெற்றியும் பெற்று விட்டனர். ஆனால் தமிழகத்தில் திருச்சியில் உள்ள பொன்மலையை ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாகவே ரயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது அமைந்தால், தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும்.

தமிழக அரசின் மெத்தனம்
கேரளாவில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு என கேரளா மாநில அரசு அதிக அக்கறை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கேரள முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து தனது மாநில கோரிக்கைகளை கொடுத்து நெருக்குதல் தருகிறார். ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு சந்திப்பு இதுவரை நடந்ததே இல்லை.

கேரளாவிலிருந்து நாடு முழுவதற்கும் ரயில்கள்
கேரளா மாநிலத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி ரயில்வசதிகள் உள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து பிலாஸ்பூர், கோர்பா, கோராக்பூர், இண்டோர், டேராடூன், அமிர்தசரஸ், சண்டிகர், ஹாப்பா, போர்பந்தர், ஹ{ப்ளி, ஹவுகாத்தி, நிசாமுதீன், காந்திதாம், விராவல், பிகானியர், பாவாநகர், ஷாலிமர், ஜம்முதாவி, விசாகப்பட்டிணம், திப்ருகர் போன்ற பகுதிகளுக்கு வாராந்திர நெடுந்தூர ரயில் சேவைகள் உள்ளன.

நெடுந்தூர ரயில்கள்
இதேபோல, எர்ணாகுளத்திலிருந்து புனே, மடகான், ஓக்கா, பிலாஸ்பூர், பாட்னா, நிசாமுதீன், ஹவுகாத்தி, காரைகால், அஜ்மீர் போன்ற நெடுந்தூர வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் ஹைதராபாத், தன்பாத், பாலக்காடு, நிலாம்பூர் போன்ற இடங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இது தவிர சென்னை, பெங்களுர், மங்களுர், டெல்லி போன்ற இடங்களுக்கு அதிக அளவில் தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது.

இன்டர்சிட்டியும் அவர்களுக்கே அதிகம்
கேரளா மாநிலத்தின் இரு நகரங்களுக்கு இடையே அதிக அளவில் இன்டர்சிட்டி ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தியாவின் மிகமுக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையிலிருந்து இவ்வளவு ஊர்களுக்கு நேரடி ரயில் சேவைகள் இல்லை.

புல்லட் ரயில்
திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர் மார்க்கமாக முழு கேரள பயணிகளு்கும் பயன்படும் வகையில், 630 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க கேரளா அரசு முழு வீச்சில் இயங்கி அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென கேரளா அரசின் முழு கட்டுபாட்டில் கேரளா அதிவேக ரயில் கழகம் என்று ஓர் பொதுதுறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க தனது பணியை முழு வீச்சில் செய்து வருகிறது.

தமிழகத்தில் புல்லட்டால் பயன் இல்லை
ஆனால் தமிழகத்தில் புல்லட் ரயில் சென்னை - பெங்களுர் மார்க்கத்தில் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பயணிகளும் பயன்படுமாறு இந்த திட்டம் கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக சென்னை வரை அமைக்கப்பட்டால் மட்டுமே தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புறநகர் ரயில்சேவை
சென்னை, மும்பை போன்ற நகரங்களில் இயங்குவது போன்று புறநகர் ரயில்கள் இயக்க கேரளா அரசும் ரயில்வேயின் துனை நிறுவனமான மும்பை ரயில் விகாஸ் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்திட்டத்துக்கு கேரள அமைச்ரவையும் ஒப்புதல் கொடுத்து விட்டது.

சென்னையைத் தாண்டுமா புறநகர் ரயில்சேவை
இதேபோல, தமிழகத்திலும் கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், போன்ற பகுதிகளை மையமாக வைத்து புறநகர் ரயில் சேவையை கொண்டு வர வேண்டும்.
இப்படி பல விஷயங்களில் கேரளாவை விட நாம் மிக மிக பின்தங்கியுள்ளோம். ஒற்றுமையின்மையைக் கைவிட்டு ஒரே குரலில் நமது கோரிக்கைகளை, தேவைகளை உரத்த குரலில் ஒலித்தால் மட்டுமே தமிழக ரயில் பயணிகளுக்கு முழுமையான விமோச்சனம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications