பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்தியது ஏன்.. கேரள பெண் பரபரப்பு வாக்குமூலம்!
பொள்ளாச்சி: பிறந்து 4 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் இந்த கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்துள்ளனர்.
Recommended Video
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி- யூனிஸ் தம்பதிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர்கள் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட எஸ்பி
அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் குழந்தையை உடனடியாக பத்திரமாக மீட்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரப் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில், காவல்துறையினர் மருத்துவமனைக்கு வெளியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், பின்னர் அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூர் வரை உள்ள கிட்டத்தட்ட 250 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கோவையில் பேருந்து நிலையம்
கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்திச் சென்ற நபர்கள் பாலக்காட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பாலக்காட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை கடத்திய கேரள மாநிலம், குரங்கோடு, கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஜெமினா (34) மற்றும் மற்றொரு நபர் ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனர்.

விசாரணை
பின்னர் ஜெமினாவை விசாரணை செய்ததில், அவர் தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டுளளார்.

கர்ப்பம்
அதன் பேரில் ஜெமினாதான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்துள்ளார். தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய்யாக கூறியுள்ளார். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்பதற்காக திவ்யபாரதியின் குழந்தையை கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications