சாராய தொழிலைவிட கந்துவட்டி தொழில் மோசமா?: குண்டர் சட்டம் ஏன்?- கொ.ம.தே.க ஈஸ்வரன்
சென்னை: சாராயம் விற்கின்ற தொழிலை விட ஏழைகளுக்கு உதவுகின்றன கந்துவட்டி தொழில் அத்தனை மோசமானது இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார். கந்துவட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"வட்டிக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பிணையாக வீட்டு பத்திரங்களையோ, நிலங்களின் பத்திரங்களையோ, நகைகளையோ வாங்காமல் பணம் கொடுப்பதில்லை. அதுவும் நடைமுறைகள் மாதக்கணக்கில் ஆகும். குறைந்த தொகைகளை பெற வாய்ப்பில்லை.
வங்கிகள் வாங்குகின்ற வட்டி 18 சதவீதம் வரை இருந்தால் அந்தக் கட்டணம், இந்தக் கட்டணமென்று 24 சதவீதத்தில் வந்து நிற்கிறது. அதுவுமில்லாமல் சொந்த சொத்துக்களை அடமானம் வைத்தால் கூட, மூன்றாவது இன்னொரு நபர் உத்தரவாத கையெழுத்துப்போட வேண்டும். சொத்தே இல்லாத ஏழை மக்கள் வங்கிகளிலோ, அரசு நிறுவனங்களிலோ அவசரத்துக்கு கடன் வாங்க வழியே கிடையாது.
கந்து வட்டிக்காரர்கள் என்று தீண்டத்தகாதவர்கள் போல் அழைக்கப்படுபவர்கள் எந்த உத்தவாதமுமில்லாமல் ஏழை மக்களை நம்பி அவசரத்துக்கு உடனடியாக உதவுபவர்களாக இருக்கிறார்கள். அதில் 25 சதவீதம் வரை திருப்பி வசூலிக்க முடியாமல் கூட போகலாம்.

பணம் திருப்பிக் கிடைக்கவில்லையென்றால் காவல் நிலையத்துக்கோ, நீதிமன்றத்திற்கோ செல்ல முடியாது. ஏனென்றால் எந்த ஆவணங்களும் இருக்காது. மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கந்து வட்டி என்று சொன்னாலே ஏதோ 10 ரூபாய் வட்டி என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் தொகை கூடுதலாக இருக்கும்போது 23 சதவீதத்திற்குத்தான் கொடுக்கப்படுகின்றது.
சிறுசிறு வியாபாரங்களுக்காக கொடுக்கப்படுகின்றன ஓரிரு நாட்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு கொஞ்சம் வட்டி கூடுதலாக இருக்கலாம். ஆனால் அதுவெல்லாம் வியாபாரத்தில் பங்கு என்றுதான் பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு 10,000 ரூபாய் காலையில் ஒருவர் வாங்கி மாலையில் 10,300 ரூபாய் திருப்பிக் கொடுத்தால் வாங்கியவருக்கு சில்லறை வியாபாரத்தில் 2000 ரூபாய் லாபமிருக்கும் என்பதுதான் உண்மை. இதுதான் 10 ரூபாய் வட்டி என்று பேசப்படுகிறது. ஆனால் கொடுப்பவரும், வாங்குபவரும் வியாபாரக் கூட்டாகத்தான் பார்க்கிறார்கள்.
தினசரி அவசரத் தேவைகளுக்கு ஏழை மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது. கந்து வட்டியென்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று ஏமாற்றுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏமாற்ற நினைப்பவர்களுக்கு புகார் கொடுப்பது ஒரு வழியாகத் தெரிகிறது.
இதையும் தாண்டி இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மாமூல் தர வேண்டிய கட்டாயமும் நடைமுறையில் இருக்கின்றது. இவ்வளவு இடையூறுகளுக்கிடையில்தான், உத்தரவாதமில்லாத இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். சாராயம் விற்கின்ற தொழிலை விட ஏழைகளுக்கு உதவுகின்றன இந்த தொழில் மோசமா?
தமிழகத்தில் மட்டும் இரண்டு லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு கோடி சொத்தில்லாத ஏழை மக்கள் பயனடைகிறார்கள். தங்கள் வாழ்வாதாரமாக இதை நம்புகிறார்கள். அவசரத் தேவைக்கு பணம் கொடுக்கின்ற இவர்களையெல்லாம் தடுத்து நிறுத்திவிட்டு, ஏழை மக்களுக்கும், சிறுசிறு வியாபாரம் செய்து பிழைக்கின்ற மக்களுக்கும் அரசும், எதிராகப் பேசுபவர்களும் என்ன மாற்று ஏற்பாட்டை வைத்திருக்கிறார்கள்.
மாற்று வழியை சொல்லிவிட்டு குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்துவதை பற்றி பேசுங்கள். எதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் பல கட்சித் தலைவர்களும் பேசுகிறார்கள். அரசு என்ன உண்மையென்பதை புரிந்து கொள்ள ஒரு குழுவை போடுங்கள். ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். இந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து, வரன்முறைப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும். எல்லாவிதமான அவசரத் தேவைகளுக்கும், உதவுபவர்களை குற்றவாளிகள் போல் பார்க்கக் கூடாது. அவசரப்பட்டு முடிவெடித்து இந்த தொழில் தடுத்து நிறுத்தப்பட்டால் முடியாத ஏழைக் குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.
பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனையடுத்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஈஸ்வரன்.












Click it and Unblock the Notifications