லீவு விட்டாலோ போதும், சின்ராசை கையில பிடிக்க முடியாது.. கொடைக்கானல் செஞ்ச மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: லீவு விட்டாலோ போதும், சின்ராசை கையில பிடிக்க முடியாது.. என்பது போல் கொடைக்கானல் இருக்கிறது. ஆம் லீவு விட்டால் கொடைக்கானலை கையிலேயே பிடிக்க முடியாது..

கொடைக்கானலை பற்றி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகள் கழுகு பார்வையில் வீடியோ எடுத்து காட்டியிருப்பார்கள் .அதையும் சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கண்ட காட்சிகள் அத்தனையும் மறுக்க முடியாத உண்மை தான். கொடைக்கானல் தாங்க முடியாத நெரிசலை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயறு ஆகிய மூன்று நாட்களுமே கொடைக்கானல் நிரம்பி வழிந்தது. வாகனங்கள் பல கிலோமீட்டருக்கு அணிவகுக்கின்றன.

Kodaikanal is heavily traffic jammed by tourist vehicles during holidays, need permanent solution

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் செண்பகனூர் வரை வாகனங்கள் அணிவகுக்க தொடங்கி விடுகின்றன. கொடைக்கானல் முகப்பிலேயே இப்படி என்றால் உள்ளே சென்றால், கொடைக்கானலில் பேரிஜர் ஏரி பக்கம் போனாலும் சரி, பூப்பாறை பக்கம் போனாலும் சரி, மன்னவனூர், கூக்கால் என எந்த பக்கம் திரும்பினாலும் வாகன நெருக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

கொடைக்கானல் நகர்புறங்களில் சொல்லவே வேண்டாம்..பார்க்கிங் செய்வது கூட கடினம் என்கிற அளவிற்கு வாகனங்கள் அதிக அளவில் வந்துவிடுகின்றன. இதில் மக்கள் அதிக அளவில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஒருபுறம் எனில், முறையான பார்க்கிங் வசதி இல்லாதது, மலை சாலைகளில் வாகனம் ஓட்டுவோர், மொத்தமாக சாலையை முடக்கும் வகையில் செல்லக்கூடாது என்ற விதியை கடைபிடிக்காதது, கண்ட இடத்தில் வாகனத்தை பார்க்கிங் செய்வது, சாலையோரங்களில் உங்கள் கடைகள் போன்றவை போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கின்றன.

காலாண்டு விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் பலர், வாகன நெரிசல் காரணமாக ஏண்டா இப்போது சுற்றிபார்க்க வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. கொடைக்கானலில் இயற்கை எழிலை ரசிக்க முடியாத நிலைக்கு முதல் சிக்கலே அந்த நுழைவு வாயிலில் தான் இருக்கிறது. வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் சாலையோரம் அதிக கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் அங்கு வெள்ளிநீர் வீழ்ச்சியைக் காண வரும் வாகனங்கள் சரியான பார்க்கிங் வசதி இல்லாததால், அப்படியே சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்துகிறார்கள்.இதுதான் நெரிசலின் தொடக்க புள்ளியாக உள்ளது. ஏனெனில் நுழைவு வாயிலில் டோல்கேட் இருக்கிறது. அங்கு வாகன நெருக்கம் இயல்பாகவே இருக்கும். அங்கு வாகனத்தை வாகன ஓட்டிகள் நிறுத்துவது இன்னும் அதிக நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது.

இதேபோல் ரோஸ் கார்டன் பகுதியில் பார்க்கிங் வசதி இல்லை என்பதால் பலரும் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் அப்சர்வேட்டரி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.

ஏன் நகரின் மையப்பகுதியான பிரையன்ட் பூங்கா, ஏரி ஆகிய பகுதிகளில் முறையானபார்க்கிங் வசதி இல்லை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மோயர்பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியிலும் வாகன நிறுத்தம் இல்லாத காரணத்தால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு மக்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்கிறார்கள். இதுவும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதேபோல் பல ஓட்டல்களில் வாகன நிறுத்தம் வசதியும் இல்லை. இப்படியான சூழலில் கொடைக்கானலில் வாகனங்கள் வரும் அளவிற்கு பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நேற்று கொடைக்கானலுக்கு காலை ஐந்து மணியில் இருந்தே வாகன நெருக்கம் அதிக அளவில் இருந்தது. காலை 9மணிக்கு எல்லாம் தாங்க முடியாத அளவிற்கு வாகனங்கள் வந்துவிட்டன.இதனால் சுற்றுலா வந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கழிவறை, குடிநீரின்றி தவிக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்டது .

வாகனங்கள் பல பகுதிகளில் நகர முடியாமல் ஒரே இடத்திலேயே பல மணி நேரம் நின்றதால் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை வீடுகளின் வாசல்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் அமர்ந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது.இதேபோல் கொடைக்கானல் நகருக்குள் வர முடியாத நிலை இருந்ததால் பல வாகனங்கள் திரும்பிச் சென்றன. இதுமட்டுமின்றி நகருக்கு வருகை தந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல மணி நேரம் உள்ளே வரமுடியாமலும் வெளியே போக முடியாமலும்தவித்து,மிக தாமதமாக வந்து புறப்பட்டு சென்றன.

ஏன் வாரச்சந்தைக்கு வந்த காய்கறி வியாபாரிகளும் காலையில் கொண்டு வந்த காய்கறிகளை விற்பனை செய்ய மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.. கொடைக்கானல் சுற்றுலா நகரமாக மாறி பல வருடம்ஆகிவிட்டது. எனவே ஒவ்வொரு வார இறுதியிலும் அதிக மக்கள் வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அனைத்து பகுதியிலும் அமைப்பது தான் இதற்கு தீர்வாக இருக்கும். கொடைக்கானல் நகராட்சியும், சுற்றுலா துறையும் இணைந்து இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+