அரசியலுக்கு வருகிறேனா! அதுவும் விஜய்யின் கட்சியிலா! பரபரப்பு விளக்கமளித்த கேபிஒய் பாலா
மயிலாடுதுறை: அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை என சின்னத்திரை நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு வெர்றி பெற தேவையான குணநலன்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலக்க போவது யாரு பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்துக்காக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கேபிஒய் பாலா கூறுகையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அவர் பீக்கில் இருக்கும் நடிகர், நான் ரொம்ப வீக்கில் இருக்கேன். என் கிட்ட போய் அவரை பற்றி கேட்கிறீர்களே, எனவே அவரை பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய இடத்தில் இல்லை.
அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். எனக்கு திருமணம் நடக்கும் ஆனால் தேதிதான் தெரியவில்லை. நடிகர் விஜய் கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பாலா கூறுகையில் ஏன் சார் கோர்த்து விடுற மாதிரியே கேள்வி கேட்குறீங்க.
அரசியலுக்கு செல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை, பதவி ஆசை எல்லாம் இல்லவே இல்லை, மக்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம். நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே மக்கள்தான். அவர்கள்தான் என்னை ஊக்குவித்து வெற்றி பெற வைத்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்தால் போதும்.
ஒரு முறை ஆம்புலன்ஸில் நிறைய பணம் கேட்டார்கள். அதனால் அவர்கள் போக முடியாமல் அவதிப்பட்டனர். அதனால்தான் நான் இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுக்க விரும்பினேன். 10 ஆம்புலன்ஸ் வாங்க இலக்கு வைத்து தற்போது 5 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன்.
மேலும் 5 ஆம்புலன்ஸ்களை வாங்கிவிட்டு அடுத்த இலக்குகளை நோக்கி பயணிப்பேன். எனக்கு அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் இருக்கிறது என பாலா தெரிவித்தார். கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் பாலா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் என பாலாவை சொல்ல முடியாது. ஆனாலும் சொற்ப சம்பளத்தில் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறந்தாங்கி நமது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதன் பிறகு ஆகஸ்ட் மாதம் மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து இறக்கிறார்கள் என்பதற்காக மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார்.
மூன்று சோளக்களை கிராமத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை செப்டம்பர் மாதம் வாங்கிக் கொடுத்துள்ளார். அது போல் அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கேபிஒய் பாலா வழங்கினார். இது அவருடைய 4ஆவது ஆம்புல்ன்ஸ் ஆகும். தற்போது 5ஆவது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications