கிருஷ்ணகிரியில் மாமியார் மருமகள்.. தென்காசியில் அம்மா- மகள்.. ஆடிப்போக வைத்த ஒரே அசிங்கமான வேலை
தென்காசி: கிருஷ்ணகிரியில் மாமியார் மருமகள் ஓடும் பஸ்ஸில் கைவரிசை காட்டி சிக்கினார்கள். அடுத்தாக தென்காசியில் அம்மா, மகள் துப்பாட்டா மூலம் கைவரிசை காட்டி சிக்கியுள்ளார்கள். சமூகத்தில் பணம் சம்பாதிக்க இப்படி எல்லாமா நடந்து கொள்வார்கள் என்பது போல், அம்மா மகளும், மாமியார் மருமகளும் நடந்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
சமூகத்தில் பணம் தான் எல்லாம் என்று மாறிவிட்டது. பணத்திற்காக பெற்ற தாயை கூட இன்றைக்கு கைவிட பலர் தயாராக உள்ளார்கள். சிலர் குடும்பமாக திருடுகிறார்கள். ஊர் ஊராக போய் திருடுகிறார்கள். கிருஷ்ணகிரியில் மாமியார் மருமகள் திருடி சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்கலட்டி கிராமத்தை சேர்ந்த முனிரத்னா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அட்சய திருதியையொட்டி நகை வாங்க கிருஷ்ணகிரியில் உள்ள நகை கடைக்கு செல்ல தேன்கனிக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் ஏறி இருக்கிறார்.. பஸ்சில் கூட்ட நெரிசலில் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை யாரோ திருடி இருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது 2 பெண்கள் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்தது அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில், அந்த பெண்கள் திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு கிராமத்தை சேர்ந்த கருப்பன் மனைவி அலமேலு (45), அவருடைய மருமகள் புவனா (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் முனிரத்தினாவிடம் ஓடும் பஸ்சில் பணத்தை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், கூடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் பணம், நகை திருடி கைவரிசை காட்டுவதும் வழக்கமாக வைத்து இருந்ததும் தெரிய வந்தது. கைதான மாமியார்- மருமகளை போலீசார் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் மாமியார் மருமகள் என்றால், தென்காசி மாவட்டத்தில் அம்மா மகள் இப்படியான குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நகை பறித்த தாய்-மகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த 50 வயதாகும் செல்வி என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவரிடம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தாரைச் சேர்ந்த மாரி என்ற பூமாரி (40) என்ற பெண் ஏற்கனவே அறிமுகமாகி பழகி இருக்கிறார். இந்த நிலையில் பூமாரி நேற்று முன்தினம் தனது மகள் மதுமிதாவுடன் (20) செல்வியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அங்கு செல்வி தனியாக இருந்ததை நோட்டமிட்ட பூமாரி, செல்வி அணிந்திருந்த நகைகளை பறிக்க திட்டமிட்டார். அதன்படி பூமாரி, மதுமிதாவின் துப்பட்டாவை வாங்கி, அதனை வைத்து செல்வியின் கழுத்தில் திடீரென்று இறுக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்திருக்கிறார்.
இதையடுத்து செல்வி அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்க நகைகளை பூமாரி, மதுமிதா ஆகியோர் கழட்டி கொண்டு தப்பி சென்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து, கண்விழித்த செல்வி சிவகிரி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் சங்கரன்கோவில் லாட்ஜில் பதுங்கியிருந்த பூமாரி, மதுமிதா ஆகியோரை கைது செய்து நகைகளை மீட்டார்கள். பின்னர் அவர்களை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications