3 நாட்கள் மது விற்பனைத் தடை... மீறினால் 6 மாதம் சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை : லோக்சபா தேர்தலையொட்டி இன்று முதல் மூன்று நாட்கள் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டிள்ளது. ஆனால், அதனை மீறி திருட்டுத்தனமாக ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப் படும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் தேர்த்ல் முடியும் வரை தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் நேற்று மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது :-

கருத்துக்கணிப்புகளுக்கு தடை...
24-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, அதாவது 22-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை டி.வி.கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடக்கூடாது. ஆனால் தேர்தல் குறித்த விளம்பரங்களை பத்திரிகைகளில் மட்டும் வெளியிடலாம்.

42 மையங்கள்...
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கைக்காக 42 மையங்களை இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இணையதளத்தில் அந்த மையங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளோம்.

தகுந்த பாதுகாப்புடன்...
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டு எந்திரங்களை கொண்டு செல்லும் பணி 23-ந் தேதி (நாளை) மாலையில் தொடங்கும். மண்டல அதிகாரியின் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் வாடகை வேன்களில் அவற்றை கொண்டு செல்வார்கள். மண்டல அதிகாரி அதை வாக்குச்சாவடி தலைமை அதிகாரியிடம் ஒப்படைப்பார்.

கட்டுப்பாட்டு எந்திரங்கள்...
இதில் இரண்டு விதமான பொருட்கள் உள்ளன. மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டியவை, சாதாரணமாக கையாளக்கூடியவை என்று பிரித்து வைத்து, அதற்கேற்ற பாதுகாப்பு அளித்துக்கொண்டு செல்வார்கள். தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக தற்போது 68 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன.

இரண்டடுக்கு பாதுகாப்பு...
ஓட்டுப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்போடு வைக்கப்படும். அங்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். முதல் உள் வட்டத்தில் மத்திய போலீசாரின் பாதுகாப்பு இருக்கும்.

கண்காணிப்பு கேமரா....
இரண்டாவது வெளி வட்டத்தில் மாநில போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில், உள்ள ஜன்னல்கள், அடைத்து சீல் வைக்கப்படும். ஒரே ஒரு கதவு மட்டுமே திறந்து மூடும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும். அதில் இரண்டு பூட்டுகள் போடப்பட்டு இருக்கும். அந்த கதவு 24 மணி நேரமும் ரகசிய கேமராவின் கண்காணிப்பில் இருக்கும். கேமரா தொடர்ந்து அதை பதிவு செய்துகொண்டிருக்கும். நான் வந்தால்கூட, அதை வீடியோ படம் எடுப்பார்கள். வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு, அந்த எந்திரங்களை கண்காணிப்பதற்காக அங்கு தங்கும் வசதி செய்து தரப்படும்.

பாதுகாப்பு பணியில்...
இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில், தமிழக போலீசார் 75 ஆயிரம் பேரும், முன்னாள் படை வீரர் உள்பட போலீஸ் அல்லாதோர் 25 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

செலவு கணக்கு...
நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட ஒரு வேட்பாளர் அதிகமாக செலவழித்துவிட்டதாக புகார் வந்தது. ஆனால் இதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் முடிந்து 30 நாட்கள் வரை இறுதி செலவு கணக்கை தாக்கல் செய்யவும், அதை சரிபார்க்கவும் அவகாசம் உள்ளது.

வாக்குப்பதிவு நினைவூட்டல்...
‘‘கண்டிப்பாக வாக்குப்பதிவு செய்யுங்கள்'' என்ற நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.கள், ரேடியோ, எப்.எம். மூலம் வாசகங்கள் போன்றவை 23-ந் தேதி பிற்பகலில் இருந்து வெளியிடப்படும். எங்களிடம் 60 லட்சம் வாக்காளர்களின் செல்போன் எண்கள் உள்ளன. அவற்றுக்கு 23-ந் தேதியன்றும், வாக்குப்பதிவு தினமான 24-ந் தேதியன்றும் நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவோம்.

கட்டாய விடுமுறை....
வாக்குப்பதிவு தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 135(பி) பிரிவு சொல்கிறது. என்றாலும், அத்தியாவசிய பணிகள் என்றும் உள்ளன.

விடுமுறை அளிக்காவிட்டால்...
ஓட்டுப்பதிவு செய்துவிட்டு அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும், அன்று விடுமுறை கிடையாது என்றும் சில நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. வாக்குப்பதிவு அன்று தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாதிருந்தால், போன் மூலம் புகார் செய்யலாம். உடனடியாக அங்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

கைதிகளுக்கு தபால் ஓட்டு...
சிறையில் உள்ள கைதிகளில் அனைவரும் வாக்களிக்க முடியாது. குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் மட்டும் தபால் மூலம் ஓட்டுபோடலாம்.

அரசு ஊழியர்களுக்கு...
ராணுவம், விமானப்படை, கப்பற்படையினர், வெளிமாநிலங்களில் தேர்தல் பணிக்கு சென்றுள்ள தமிழக போலீசார், வெளிநாட்டில் அயல் பணியில் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணியில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

மேலும் 12 ஆவணங்கள்....
ஓட்டுப்போடுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் ஆகியவற்றை மட்டும் முன்பு இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்ததது. தற்போது மேலும் 12 ஆவணங்களை தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு 22-ந் தேதி (இன்று) வெளியிடப்படும்.

புகார் இல்லை...
குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பளிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் கூறிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது. அதுசம்பந்தமாக புகார் எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு அதிகாரபூர்வமான இமெயிலுக்கு புகார் அனுப்பப்படவில்லை.

மது விற்றால் சிறை...
22, 23, 24-ந் தேதிகளில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நாட்களில் ஓட்டல், கடைகள், பார்கள், பொது இடங்களில் மது விற்பனை நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்துக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications