பாஜகவுக்கு போன அதிமுக; நாதக ஓட்டுக்கள்! விவிபேட் மோசடி! கோவை பொய் கணக்கு! அய்யநாதன் ஆவேசம்
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றுள்ளது.
பாஜக இந்தத் தேர்தலில் 11.24% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக 20.46% வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதைத்தான் நேற்று டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டத்தில் மோடி குறிப்பிட்டுப் பேசினார். 'நாங்கள் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் நல்ல வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம். அது வருங்கால மாற்றத்திற்கான அறிகுறி' என்று பேசி இருந்தார்.
பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களாகக் களம் கண்டிருந்த தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட யாருமே வெற்றி பெறவில்லை.
கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 450132 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 236490 வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை. அங்கேயே அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதேபோல் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன் 290683 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் அதிமுக எம்பி ஆக இருந்த ஜெயவர்த்தன் 172491 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு, டெபாசிட் இழந்துள்ளார்.
இந்தளவுக்கு பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என அண்ணாமலை சொல்கிறார். ஆனால், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், விவிபேட் பற்றுச்சீட்டுகளை எண்ணாமல் இந்த வாக்கு எண்ணிக்கை சொல்லப்பட்டுள்ளது. அதை ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜக இதில் பாதி வாக்குகளை வாங்கி இருக்காது. அதற்கான சாத்தியமே இல்லை.
பாஜக வளர்ந்துள்ளதாக ஒரு மோசடிக் கணக்கைக் காட்டுகிறார்கள். அண்ணாமலை வாங்கி உள்ளதாகச் சொல்லும் வாக்குகள் உண்மையானதல்ல என்று சவால் விட்டுப் பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்து அய்யநாதன், "விவிபேட் மோசடி மூலம்தான் பாஜக இந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. மோடியின் வாரணாசி தொகுதியிலும் அண்ணாமலைப் போட்டியிட்ட கோவை தொகுதியிலும் விவிபேட்டில் உள்ள பற்றுச் சீட்டுகளைத் திறந்து முழுமையாக எண்ணினால் இந்த இரண்டும் பேரும் காலி.
இன்னும் சொல்லப்போனால் மோடியாவது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிடுவார். அண்ணாமலை இரண்டாம் இடம் என்று சொல்கிறார்கள் இல்லையா? அது அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதுதான் உண்மை.
முடிந்தால், முழுமையாக மறுபடியும் எண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம். அதிமுகவை எதிர்த்து 4.5 லட்சம் ஓட்டுகளை வாங்கக் கூடிய கட்சியா பாஜக. அண்ணாமலை அந்தளவுக்கு பவர் ஃபுல் வேட்பாளரா?
அப்படி என்றால் ஏன் 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்தார்கள்? திமுக வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. எல்லா கட்சிகளும் அதிக வாக்குகளை வாங்கி உள்ளன.
ஆனால், பாஜக கூட்டணியில் அண்ணாமலை மட்டும் அதிக வாக்குகள் வாங்கியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டார்கள். இது எப்படி? பாமக தர்மபுரியில் தோல்வியடைந்து இருக்கிறது.
அப்படி என்றால், அவர் தொகுதியில் மட்டும் வேலை செய்து கொண்டுள்ளார் அண்ணாமலை. இது தெரியவில்லை யாருக்கும்? இந்த விவிபேட் எந்திரத்தை எப்படி நுணுக்கமாக மாற்றி அமைக்க முடியும் என்பதற்குக் கோவை தொகுதி ஒரு சான்று.
அண்ணாமலை நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று அடிக்கடி சொல்கிறார். நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள், ஆனால் கூட இருந்த கட்சி எல்லாம் அழிந்துவிட்டனவே? உங்களுக்கு இவ்வளவு வாக்கு விழுந்துள்ளபோது, உங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் பாஜக தொண்டர்கள் வாக்களித்திருக்க வேண்டும் இல்லையா?
அப்படி என்றால் ஏன் போடவில்லை? ஏன் கூட்டணிக்கட்சிக்கு வாக்கு அதிகரிக்கவில்லை?
அண்ணாமலைக்கு நான் சவால்விட்டுச் சொல்கிறேன். பாஜக அதிகமாக வாங்கியுள்ள தொகுதிகளில் உள்ள விவிபேட் பற்றுச் சீட்டுகளை எடுத்து முழுமையாக எண்ணிக் காட்டுங்கள். நீங்கள் வாங்கிய ஓட்டுப் பாதி அதில் இருக்காது.
சுருக்கமான சொன்னால், அதிமுக ஓட்டுகளை எல்லாம் பாஜக திருடிவிட்டது. அதற்கு விவிபேட் உதவி செய்துவிட்டது. நான் இதை முன்பே சொன்னேன். அதிமுகவையும் நாம் தமிழர் கட்சியையும் குறிவைப்பார்கள் எனச் சொன்னேன். அதான் நடந்தது.
அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் அறிமுகமான வேட்பாளர். ஏற்கெனவே தொகுதியில் நின்று வென்றவர். அவர் 172491 ஓட்டுகளை வாங்கி இருக்கிறார். ஆனால், தமிழிசை செளந்தரராஜன் 290683 வாக்குகளை வாங்கி இருக்கிறார். அதிமுக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சரி, பிராமின் ஓட்டு வடமாநிலத்தவர் ஓட்டுப் போட்டுள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். அதற்காக 2 லட்சத்து 90 ஆயிரம் ஓட்டா வரும். அதுவும் தென் சென்னை தொகுதியிலா? யாரை நம்பச் சொல்கிறீர்கள்?
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் குறைந்த பட்சம் 12% வாக்குகளை வாங்கி இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தளவுக்கு ஆதரவு இருந்தது. பாஜகவைவிட நாம் தமிழர் தான் 4ஆவது பெரிய கட்சி. அதை மாற்றி அமைத்துவிட்டார்கள். அதற்கு விவிபேட் மோசடிதான் காரணம்.
நாம் தமிழர் கட்சிக்கு வரவேண்டிய 4% வாக்குகள் பாஜகவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதான் என் கருத்து" என்கிறார்.












Click it and Unblock the Notifications