லாரி ஸ்டிரைக் நீடிப்பு: காய்கறிகள் விலை உயரும் அபாயம்-அமைச்சருடன் பேச்சு வார்த்தை தோல்வி...
போக்குவரத்து அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் லாரிகள் வேலை நிலைநிறுத்தம் நீடிக்கிறது.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், லாரிகள் வேலைநிறுத்தம் இன்றும் நீடிக்கிறது. இதனால் நாளொன்று 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. காய்கறிகள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும், சுங்கவரி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 350 லோடு காய்கறிகள் வரும். அந்த வகையில், நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் லோடு வந்தது. நேற்று வரவில்லை.

பேச்சு வார்த்தை தோல்வி
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை நேற்று மதியம் 1 மணிக்கு நடந்தது. அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காய்கறிகள் விலை உயரும்
இந்த போராட்டத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்ததத்தில் ஈடுபடவுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 12 லட்சம் லாரிகள் இயங்காது. வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்வதால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று, மளிகை பொருட்கள் வினியோகமும் தடைபட்டுள்ளது.

ரூ. 150 கோடி ரூபாய் இழப்பு
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்மாநிலம் முழுவதும் நாளொன்று 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

போராட்டம் தொடரும்
செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதாகவும் கூறினார். ஆனால், இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்பதால் போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.

வேலைநிறுத்த நோட்டீஸ்
அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடந்த போது, ஸ்டிரைக் நோட்டீசே இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றார். நாங்கள் மார்ச் 12ம் தேதியே கொடுத்துவிட்டோம் என கூறியவுடன், அதன்பிறகு அதிகாரி ஒருவர் அமைச்சரிடம் வந்து நாங்கள் கொடுத்த ஸ்டிரைக் நோட்டீசை தருகிறார். மேலும், எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்ய எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அமைச்சர் கேட்கிறார். நாங்கள் அதை ஏற்கவில்லை. எனவே, எங்களுடைய வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.












Click it and Unblock the Notifications