கல்லாக சமைந்து போன காதல்.... காதலர்களை ஈர்க்கும் ஏழைகளின் தாஜ்மஹால்!
மானாமதுரை: காதலர்களின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக, உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமை பெற்றது தாஜ்மஹால்.
ஷாஜகான், மும்தாஜ் காதலைக் கவிதையாகச் சொல்லும் இது ஆக்ராவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மானாமதுரை அருகே ஏழைகளின் தாஜ்மஹால் ஒன்று உள்ளது உங்களுக்குத் தெரியுமா.

சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை நூற்றாண்டுகளை கடந்து இன்றும் இப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது. மானாமதுரையில் சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது. அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன. இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
மேலும், அந்தக் கற்களின் காதல் கதை என அப்பகுதி மக்கள் பிளாஷ்பேக் ஒன்றையும் சொல்கிறார்கள். அதாவது, பழங்காலத்தில் மேய்ச்சலை குலத்தொழிலாக கொண்ட ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்து, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்கிறார்கள் அவர்கள்.
அதோடு, இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது. இதனால் பல நூறாண்டுகள் கடந்தும் உறுதியாக கல்லாக நிற்கும் இந்த காதலர்களை வழிபட இன்றைய இமெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் காதலர்கள் படையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இங்கு வழிபட்டு, காதல் நிறைவேறி திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிகளும் மீண்டும் வருகின்றனர். இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நல்ல காதலன் அல்லது நல்ல காதலி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருபவர்களும் இங்கு வருவது உண்டாம்.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு நிறைய காதல் ஜோடிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர், இந்தக் கற்களின் கீழ் வளையல், மஞ்சள், பொட்டு, காசு வைத்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனராம்.
இரண்டே இரண்டு கற்கள், வெயில், மழையில் நனைந்தபடி.. காதல் சின்னமாக இதை சிலர் சொல்லப் போக இது ஏழைகளின் தாஜ்மஹால் என்ற செல்லப் பெயரையும் பெற்று விட்டது.
இந்த கல்லுக்குள் புதைந்துள்ள மர்மம் என்னவோ.. தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து விளக்கினால்தான் உண்டு!
படம்: ஜன்னல்












Click it and Unblock the Notifications