காலில் விழ வேண்டாம்.. ஊக்கம் தரும் வாழ்த்துகளை உரமாக்கிக் கொள்கிறேன்.. ஸ்டாலின் கடிதம்
தன் காலில் யாரும் விழ வேண்டாம் என்று அறிவித்ததை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கும் நன்றிகளை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக பொறுபேற்றுள்ள மு.க. ஸ்டாலின், தன் காலில் யாரும் விழ வேண்டாம் என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட திமுகவினருக்கும், அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டவர்களுக்கும் ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.
அண்மையில் மு.க. ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து தன் காலில் யாரும் விழ வேண்டாம் என்று அவர் அறிவித்திருந்தார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே,
உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். கழகத்தின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதல் தினந்தோறும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

வாழ்த்துக்களுக்கு நன்றி
அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவற்றின் முன்னணி நிர்வாகிகளும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்துகள் தெரிவித்தது, தனிப்பட்ட எனக்குரிய வாழ்த்தாக மட்டுமல்லாமல், தமிழர்களின் பண்பாட்டுக்கு, சிறப்பு சேர்க்கும் பெருமையாகவே கருதுகிறேன். அருகிவரும் பண்பாட்டை மீட்டெடுத்து நாளும் பெருகிவரும் வகையில் வெளிப்பட்ட இத்தகைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் மாச்சரியங்களைக் கடந்த நட்பும் நல்லுறவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுதி ஏற்பு
ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதில் மற்றவர்களுடன் இணைந்தும், தமிழகத்தின் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்தும் செயலாற்றுவதற்கு இத்தகைய வாழ்த்துகள் வலிமையாகத் துணை நிற்கும் என்றும் நம்புகிறேன். அதுபோலவே அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஊடகத்துறையினர், சமூக நல அமைப்புகளைச் சார்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி, அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டி மேலும் வளர்ந்தோங்கும் வண்ணம் செயல்பட உறுதியேற்கிறேன்.

சீரிய தருணம்
எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகின்றனவோ அந்தளவுக்கு பொறுப்புகளும் பணிகளும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்கிறேன். எந்த நம்பிக்கையுடன் அனைவரும் வாழ்த்துகிறார்களோ அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் சீரிய தருணமாக இது அமைந்துள்ளது.

சங்க இலக்கிய பண்பாடு
கழகத் தொண்டர்களின் சங்கிலித் தொடர் போன்ற வருகையும் வாழ்த்தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களுக்கும் அதில் நாளைப் பெறப் போகிற வெற்றிகளுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்களின் அன்பைக் கருதுகிறேன். போர்க்களம் செல்லும் வீரர்களுக்கு அவர்களின் இல்லத்தாரும் ஊர்மக்களும் மாலையிட்டு, வெற்றித்திலகமிட்டு, பறைகொட்டி வாழ்த்துச் சொன்ன வரலாற்றை புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய ‘சங்கத் தமிழ்' நூலில் இவற்றை அழகு மிகு சொற்களால் கவிதையாக வடித்திருக்கிறார்.

திமுகவினருக்கு நன்றி
பண்டைத்தமிழர் பாரம்பரியத்தை ஒட்டி ஊக்கம் தரும் வாழ்த்துகளை வழங்கும் உடன்பிறப்புகள் ஆர்வம் மிகுதியால், என் காலில் விழுவதைத் தவிர்த்து, கழகத்தின் சுயமரியாதைக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என நான் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் எனது வேண்டுகோளை ஏற்று, கழகக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றியமைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்பிக்கைச் செயல்
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர்கின்ற இன்றைய நிலையில், சென்ற முறை ஏமாந்து போன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கான பணிகளை நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்; வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நமது செயல்பாடுகள் தொடர வேண்டும்.

உரமாகும் வாழ்த்து
எதையும் ஜனநாயகப்பூர்வமாக செயல்படுத்தக் கூடிய கழகம், மக்களின் எதிர்பார்ப்புகளையும் விரைந்து நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படும். களத்தில் விளையவிருக்கும் செயல்பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள்.
இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications