தமிழக பிரச்சினைகள் குறித்து அரசின் நிலை பற்றி மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் - கருணாநிதி
சென்னை: தமிழக பிரச்சினைகள் குறித்த அரசின் நிலை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டொரு நாட்களில் இல்லம் திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையில் அன்றாடம் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அவர் முழு நலம் பெற்று இல்லம் திரும்பி முதலமைச்சர் பணிகளை ஆற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அப்பல்லா மருத்துவ மனை அறிக்கை கூறுகிறது. முதலமைச்சர் அலுவலகத்திலும், மற்ற அமைச்சர்கள் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான கோப்புகள் முடிவினை எதிர்பார்த்துத் தேங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மத்திய உயர் மட்டக் குழு, தாங்களாகவே மேட்டூர், பவானி அணைகளுக்குச் சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்று, அழைத்துச் சென்று, நம்முடைய நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா? அந்தக் குழுவினரை அழைத்துச் சென்று தமிழகத்திலே உள்ள பல்வேறு விவசாயச் சங்கத்தினரைச் சந்திக்க வைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்க வைத்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் மாநிலத்தில் ஒரு செயல்படும் அரசு வேண்டும்.
தமிழகத்திலே உள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்ற கவலையுடனும், வேதனையுடனும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு தமிழக அரசு எந்த வழியைக் காட்டப் போகிறது என்பது பற்றி எந்தவிதமான அறிக்கையும் இல்லை. மாநில அரசு என்ன சொல்கிறது? மத்திய அரசு என்ன சொல்கிறது? உச்ச நீதி மன்றம் என்ன சொல்கிறது? என்று ஒவ்வொரு நாளும் விவசாயிகள் காத்துக் கிடக்கிறார்கள்.
உச்ச நீதி மன்றமோ கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து தமிழகத்திற்கு ஒவ்வொரு நாளும் இத்தனை கன அடி தண்ணீர் திறக்க வேண்டு மென்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களையும், அமைச்சரவைக் கூட்டங்களையும், சிறப்புப் பேரவை கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று பிடிவாதமாகத் தெரிவித்து வருகிறார்கள்.
அது போலவே உச்ச நீதி மன்றம், மத்திய அரசு நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கின்றது. ஆனால் மத்திய அரசோ, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உத்தரவிட உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை, நாங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்கிறது. வேண்டுமானால் உயர் மட்டக் குழு ஒன்றினை அமைக்கிறோம் என்கிறார்கள். உச்ச நீதி மன்றம் அதை ஏற்று, அவ்வாறே உத்தரவு பிறப்பித்து, தற்போது அந்தக் குழு தான் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை, ஒரு மாநில அரசோ, மத்திய அரசோ மதிக்க வில்லை என்றால், மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?
நீதி மன்றத் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் சாதாரண மக்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்வது தவறு என்ற போதிலும், கருத்துரிமை போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தில் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அது அவர்களுடைய உரிமை என்று வாதிடப்படுகிறது. ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதலமைச்சரே, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை, "அது கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி" என்று பேசுவது நிச்சயமாக நீதி மன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இந்தியாவில் உச்ச நீதி மன்றம் தான் நாட்டின் நீதி பரிபாலனத்துக்கான உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்டது. அதன் தீர்ப்பை மதிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சட்டத்தையே மதிக்காமல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொள்வதற்குச் சமமாகும்.
எதிர்க் கட்சிகள் காவிரி நீரைத் தமிழகத்துக்கு விடக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும், முதலமைச்சர் பொறுப்பிலே உள்ளவர், அது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சியில் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று சமாதானம் கூற வேண்டும். ஆனால் கர்நாடகாவில் ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க. வும் விரைவில் அங்கே நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதிலே கொண்டு அரசியலை முன்னிலைப்படுத்தியும் சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்படுகின்றன என்பது தான் உண்மை. இந்தத் தொற்று நோய் ஒவ்வொரு மாநிலமாகப் பரவிப் பாதிக்குமானால், இந்தியாவின் ஒற்றுமை - ஒருமைப்பாடு என்பதெல்லாம் அகழாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகி விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
மத்திய அரசின் வழக்கறிஞர் ரோத்தகி அவர்கள், உச்ச நீதி மன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க முடியாது என்று கூறியவுடன், நீதிபதிகள் அவரை நோக்கி, உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், காவிரி கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்திய மத்திய அரசு, தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்த முன்வராதது ஏன் என்றும்; 2013ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது, இப்போது மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் என்றும்; கடந்த 30-9-2016 அன்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட போது, எதிர்ப்போ, மாற்றுக் கருத்தோ தெரிவிக்காத மத்திய அரசு, பின்னர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஏன் என்றும் வினவியிருக்கிறார்கள். மத்திய அரசு வழக்கறிஞரால், நீதிபதிகளின் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் கூற முடியவில்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளைக் கொடுத்து வருகிறார்கள். அதுபற்றியெல்லாம் முடிவெடுத்து, அரசின் நிலை அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதுபற்றி மத்திய அரசோ, தமிழக ஆளுநரோ முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழ் நாட்டு மக்களின் விருப்பம். முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய பணியினை தொடர்கின்ற வரையில், தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்; நாட்டு மக்களின் வேண்டுகோள்! என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications